Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.15.96 கோடி பற்றாக்குறை பட்ஜெட்

Print PDF

தினமணி 20.04.2010

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.15.96 கோடி பற்றாக்குறை பட்ஜெட்

தூத்துக்குடி, ஏப். 19: தூத்துக்குடி மாநகராட்சியில் 2010- 2011-ம் ஆண்டிற்கான ரூ. 15.96 கோடி பற்றாக்குறை பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம், மேயர் இரா. கஸ்தூரி தங்கம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ஜெ. தொம்மை ஜேசுவடியான், ஆணையர் பெ. குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாதாரணக் கூட்டப் பொருளில் உள்ள அனைத்து தீர்மானங்களும் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து 2010- 2011-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து மேயர் கஸ்தூரி தங்கம் பேசினார்.

2009-2010-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வருவாய் நிதியில் ரூ. 4,75,92,000 பற்றாக்குறை ஏற்படும் என உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால், வரவினங்களும், செலவினங்களும் இறுதி செய்யப்பட்டதில் ரூ. 5,35,33,000 பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என மேயர் குறிப்பிட்டார்.

நடப்பு ஆண்டிற்கான (2010- 2011) வருவாய் நிதியில் ரூ. 8,75,43,000 பற்றாக்குறை ஏற்படும் எனவும், குடிநீர் நிதியில் ரூ. 7,21,20,000 பற்றாக்குறையாகவும், கல்வி நிதியில் ரூ. 17.95 லட்சம் உபரி வருமானம் ஏற்படும் எனவும் உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.

வருவாய் நிதி: வருவாய் நிதியை பொறுத்தவரை சொத்துவரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலமாக ரூ. 5.87 கோடியும், அரசு சுழல் நிதியாக ரூ. 11.50 கோடியும், அரசு மானியமாக ரூ. 1.10 கோடியும், ஏனைய வருமானங்கள் மூலம் ரூ. 4,01,77,000 என மொத்தம் ரூ. 22,48,77,000 வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சாலை பராமரிப்பு மற்றும் கட்டட பராமரிப்பு போன்றவற்றுக்கு ரூ. 1.8 கோடி, திட்ட செலவுகளுக்கு ரூ. 20 லட்சம், பொது சுகாதார பணிகளுக்கு ரூ. 1.75 கோடி, இதர செலவினங்களுக்கு ரூ. 27,49,20,000 என மொத்தம் ரூ. 31,24,20,000 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 8,75,43,000 பற்றாக்குறை ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

குடிநீர் மற்றும் வடிகால் நிதி: நடப்பு ஆண்டில் குடிநீர் வரியாக ரூ. 4.15 கோடி, இதர வருமானமாக ரூ. 4.92 கோடி என மொத்தம் ரூ. 9.07 கோடி வருமானம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குடிநீர் இயக்க செலவிற்காக ரூ. 2.60 கோடி, நிர்வாக செலவு மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ. 2.45 கோடி, கடன் செலுத்துதலுக்காக ரூ. 11.24 கோடி என மொத்தம் ரூ. 16.29 கோடி செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 7,21,20,000 பற்றாக்குறை ஏற்படும்.

கல்வி நிதி: உபரி கல்வி வரியாக ரூ. 1.85 கோடி வருமானம் கிடைக்கும். இதில் ரூ. 1.67 கோடி செலவு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 17.95 லட்சம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.தி.மு.. வெளிநடப்பு: இந்த பட்ஜெட் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறி, அதிமுக உறுப்பினர்கள் அதன் கொறடா கே.டி. அன்புலிங்கம் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

Last Updated on Tuesday, 20 April 2010 10:20