Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் நகராட்சிக்கு ரூ.3.87 கோடி இழப்பீடு மின்வாரியம் நிலுவை தொகை குறித்து தகவல்

Print PDF

தினமலர் 30.06.2010

கரூர் நகராட்சிக்கு ரூ.3.87 கோடி இழப்பீடு மின்வாரியம் நிலுவை தொகை குறித்து தகவல்

கரூர்: "கரூர் நகராட்சிக்கு, தமிழ்நாடு மின்வாரியம் மூன்று கோடியே 87 லட்சத்து ஏழாயிரத்து 195 ரூபாய் இழப்பீடு நிலுவை தொகை அளிக்க வேண்டியுள்ளது' என நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கரூர் நகராட்சி சாதாரண கூட்டம் பெத்தாச்சிமன்றத்தில் தலைவர் சிவகாமசுந்தரி தலைமையில் நடந்தது. துணை தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். கூட்டம் துவங்கியதும், முதலில் உலக தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பாக நடத்தியதற்கு முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து தலைவர் சிவகாமசுந்தரி கொண்டுவந்த தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.., கவுன்சிலர்கள் முத்துசாமி, கமலா, வளர்மதி, பரமசிவம் ஆகியோர் கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர். கரூர் நகராட்சி பொறுப்பில் இருந்த மின் விநியோகம் அரசு ஆணைப்படி கடந்த 1994ல் மின்வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மின்வாரிய ஆர்ஜித சட்டம் 1954ன் படி மின் விநியோகத்தை கையகப்படுத்தும்போது, அந்த உள்ளாட்சி அமைப்புக்கு இழப்பீடு தொகை கணக்கிட்டு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர் நகராட்சிக்கு முதல்நிலை தகுதியில் இழப்பீடு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இழப்பீடு கணக்கீடு சரியாக கணக்கிடப்படாத காரணத்தினால், கடந்த 2008 டிச.,ல் 12 பேர் கொண்ட குழு, அறிக்கை தயாரித்து அளித்தது. அதன்படி பல கூட்டங்கள் நடந்து கடந்த மே 31ம் தேதி சென்னையில் நடந்த உயர்நிலை குழு கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரியம் வழங்க வேண்டிய இழப்பீடு தொகை விபர பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, கரூர் நகராட்சிக்கு வழங்க வேண்டிய ஈட்டுத்தொகை, அதன் வட்டி தொகை, நகராட்சியின் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, நகராட்சிக்கு சொந்தமான அலுவலக கட்டிடம் பயன்படுத்தியதற்கான வாடகை என மொத்தம் ஆறு கோடியே 28 லட்சத்து, 61 ஆயிரத்து 443 ரூபாய் வழங்கவேண்டியுள்ளது.

மின்வாரியத்துக்கு கரூர் நகராட்சி செலுத்த வேண்டிய மின்கட்டண நிலை தொகை இரண்டு கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 248 என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகை போக, கரூர் நகராட்சிக்கு தமிழ்நாடு மின்வாரியம் வழங்க வேண்டிய நிகர தொகை மூன்று கோடியே 87 லட்சத்து ஏழாயிரத்து 195 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் கவுன்சிலர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. கரூர் நகராட்சியில் 1998 - 99ல் பொது சொத்துவரி சீராய்வு மேற்கொண்டு குடியிருப்பு, வாடகை மற்றும் வணிக கட்டிடம், தொழிற்சாலை கட்டிடங்களுக்கு வரி உயர்வு அறிவிக்கப்பட்டது. இவற்றுள் சில குறைபாடுகள் குறித்து அலுவலர்கள் தல ஆய்வு மேற்கொண்டதில் 209 வரிவிதிப்புகள் மாறுதலாக உள்ளது கண்டறியப்பட்டது. இவற்றுள் 1998 அக்., சொத்துவரி சீராய்வில் பயன்பாடு மாறுதலாக வரி நிர்ணயம் செய்யப்பட்டதாக தவறாக சேர்க்கப்பட்ட வரி குறைப்பு தேவையற்ற இனங்களாக ஒரு பட்டியலும் தாக்கல் செய்யப்பட்டது.

கவுன்சிலர் மணிராஜ்(தி.மு..,): நகராட்சி அலுவலர்கள் தல ஆய்வு மேற்கொண்ட முகவரியில் 1998ல் கட்டிடம் குடியிருப்பாக இருந்ததா? வாடகைக்கு விடப்பட்டதா? வணிக பயன்பாட்டில் இருந்ததா? என்று எப்படி கண்டறிந்தனர்? இத்தகைய ஆய்வுக்கு சம்மந்தப்பட்ட வார்டு கவுன்சிலரை உடன் அழைத்து சென்றால், நிலவரம் சரியாக தெரிந்திருக்கும். கவுன்சிலரையும் உடன் அழைத்து சென்று மீண்டும் கள ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்ய வேண்டும். புதிய பட்டியல், அடுத்த கூட்டத்தில் மன்றத்தின் பார்வைக்கு வைக்க வேண்டும். தலைவர் சிவகாமசுந்தரி: நகராட்சி கவுன்சிலர் ஒத்துழைப்புடன் மீண்டும் கள ஆய்வு நடத்தலாம். கவுன்சிலர் கதிரவன்(தி.மு..,): 20வது வார்டில் பால்வாடி கட்டிடம் இடிக்கப்பட்டு இதுவரை மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை. சிறிய குழந்தைகள் 40 பேர் அமர இடமின்றி தவிக்கின்றனர். தலைவர் சிவகாமசுந்தரி: மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, உடனடியாக கட்டிட பணி துவக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டம் முடிவில் பசுபதிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சியின் மின்மயானம் பராமரிப்பு பொறுப்பு ஜூனியர் சேம்பர் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. மயானம் சாவியை, அறக்கட்டளை தலைவர் சிவராமனிடம், தலைவர் சிவகாமசுந்தரி வழங்கினார். ஜூனியர் சேம்பர் ஃபோர்ட் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.