Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் காத்திருக்கும் ரூ. 5 கோடி நிதி வார்டுக்கு ரூ. 10 லச்ட்சம் வழங்குகிறார் மேயர்

Print PDF

தினமலர் 30.06.2010

மாநகராட்சியில் காத்திருக்கும் ரூ. 5 கோடி நிதி வார்டுக்கு ரூ. 10 லச்ட்சம் வழங்குகிறார் மேயர்

ஈரோடு: ""மாநகராட்சியில் உள்ள ஐந்து கோடி ரூபாய் நிதியில், ஒவ்வொரு வார்டுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் வளர்ச்சிப் பணிக்காக வழங்கப்படும்,'' என மேயர் கூறினார். ஈரோடு மாநகராட்சி கூட்டம் மேயர் குமார் முருகேஸ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம்: கவுன்சிலர் ராதாமணி: பெட்ரோல், டீஸல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேயர்: மத்திய அரசு பிரச்னையில் கவுன்சிலர்கள், மேயர் தலையிட முடியாது. நில மீட்பு இயக்கத்தினர் இங்கு பார்வையாளர்களாக வந்துள்ளனர். "மேம்பாலம் வேண்டும்' என, நானும் தெரிவிக்கவில்லை. "பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது' என்று, நினைக்கிறேன். நானும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி; தனிப்பட்ட முறையில் எதுவும் செய்ய முடியாது. கலெக்டர் மூலம் பிரச்னையை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லலாம். நில மீட்பு இயக்கத்தினர் இயற்றி உள்ள தீர்மானத்தை கொண்டு வாருங்கள் கலெக்டரிடம் கொடுக்கலாம். 80 அடி அகல சாலையை அரசால் மட்டும்தான் திறக்க முடியும். 80 அடி அகல சாலை குறித்து மாநகராட்சி கூட்டத்தில் பல்வேறு கட்டங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அன்பழகன்: சென்ற ஃபிப்ரவரி மாதம் ஒவ்வொரு வார்டுக்கும் 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. "ஒர்க் ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளதா? மாநகராட்சி வக்கீல் இருக்கிறாரா? இல்லையா? தீர்ப்புகள் அனைத்தும் நமக்கு எதிராகவே வருகிறது. 100வது தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். கமிஷனர்: அடுத்த மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைக்கலாம். மாநகராட்சி வக்கீல் உள்ளார். வழக்குகளை பார்க்கிறார். கோவேந்தன்: என் வார்டில் தண்ணீர் குறைவாக வருகிறது.

மேயர்: எட்டு பம்பிங் ஸ்டேஷன் இருக்கிறது. காவிரில் குறைந்தளவு தண்ணீர் வருவதாலும், கழிவு நீர் அதிகளவில் இருப்பதாலும் தண்ணீர் சுத்தம் செய்வது குறைந்துள்ளது. மோட்டாரில் ஆகாயத்தாமரை சிக்கி கொள்கிறது. காவிரி ஆற்றில் 2,000 கன அடி தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்துள்ளோம். வேலு: ஆழ்குழாய் அமைக்க எம்.பி., நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வாங்கி கொடுத்தேன். நிதியை கமிஷனர் புறக்கணித்து விட்டார்.

துணை மேயர் பாபு: கவுன்சிலர் பல்வேறு சிரமப்பட்டு எம்.பி., நிதியை வாங்கி கொடுத்தால் ஏன் வாங்கிக் கொள்ளவில்லை? கமிஷனர்: 50 ஆழ்குழாய்க்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எட்டு கிலோ மீட்டர் தூரத்துக்குள் 199 ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் ஒன்பது முதல் 10 குழாய் உள்ளது. ஒரு சில வார்டுகளில் ஒரு ஆழ்குழாய் மட்டுமே உள்ளது. ஆழ்குழாய் அமைப்பது பற்றிய தீர்மானத்தை மூன்று ஆண்டுகளாக யாரும் நிறைவேற்றவில்லை. இதனால், ஆழ்குழாய் அமைக்க முடியாத நிலை உள்ளது.

மதன்மோகன்: இத்தகவலை ஏன் இவ்வளவு நாட்களாக சொல்லவில்லை? இதை வைத்து பார்க்கும் போது நிர்வாகம் சரியில்லை என தோன்றுகிறது. கவுன்சிலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அப்போது, அன்பழகன் குறுக்கிட்டு அடையாள அட்டை ஒன்றை காண்பித்தார். மதன்மோகனுக்கும், அன்பழகனுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. கவுன்சிலர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கினர்.


மேயர்: ஐந்து கோடி ரூபாய் நிதி உள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் 10 லட்சம் வீதம் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது. ஜூன் மாதம் கூட்டத்தில் மேயர் ஐந்தே நிமிடத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாக கூறியதால், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், "மீண்டும் கூட்டம் நடத்தி இத்தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்படும்' என, மேயர் கூறியதால், உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் இத்தீர்மானங்களில் 22 தீர்மானங்கள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.