Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை மாநகராட்சி நிதிப் பற்றாக்குறையைப் போக்க முதல்வர், துணை முதல்வரிடம் மேயர் முறையிட வலியுறுத்தல்

Print PDF

தினமணி 30.06.2010

மதுரை மாநகராட்சி நிதிப் பற்றாக்குறையைப் போக்க முதல்வர், துணை முதல்வரிடம் மேயர் முறையிட வலியுறுத்தல்

மதுரை, ஜூன் 29: மதுரை மாநகராட்சியின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக முதல்வர், துணை முதல்வரை நேரில் சந்தித்து முறையிட மேயர் நடவடிக்கை

எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கணேசன் வலியுறுத்தினார்.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கவுன்சிலர் கணேசன் பேசியது:

மாநகராட்சி நிதிப் பற்றாக்குறையால் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க முடியவில்லை. ஓய்வூதியர்களுக்கும் பணிக்கொடை வழங்கவில்லை. வாரிசுதாரர்களுக்கான பணி நியமனமும் மேற்கொள்ளவில்லை.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி மேயர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு..ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து முறையிட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யக் கோருகின்றனர். பல முறை சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சென்னை, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருவதை நாம் செய்திகள் மூலம் அறிகிறோம்.

ஆனால், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சேர்ந்து மதுரை வந்திருந்தபோதும், அவர்கள் அருகருகே அமர்ந்திருந்தபோதும் அவர்களை மேயரோ, கமிஷனரோ சந்தித்து நிதிநிலை குறித்துத் தெரிவிப்பதில்லை. துணை முதல்வரை சந்தித்தால் இங்கிருக்கும் மத்திய அமைச்சர் மு..அழகிரி கோபித்துக்கொள்வாரோ என்ற பயத்தால்தான் இவர்கள் மு..ஸ்டாலினை சந்திப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் வெள்ளப்பெருக்கு நேரத்தில் மதுரை மாநகராட்சிக்கு கோரப்பட்ட ரூ.74 கோடி சிறப்பு நிதி இன்னும் கிடைத்தபாடில்லை என்றார்.

இதற்கு மேயர் கோ.தேன்மொழி, விரைவில் எனது தலைமையில் சிறப்புக் குழுவினர் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

கமிஷனர் எஸ்.செபாஸ்டின் பேசுகையில், பல நேரங்களில் நாங்கள் நிதி அவசர நேரங்களில் நிதி கோரி அணுகியுள்ளோம். தற்போது சுற்றுலா மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ.25 கோடி மதுரை மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.

காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை: கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் சுப்புராம் கேள்விக்கு கமிஷனர் எஸ். செபாஸ்டின் பதில் அளிக்கையில், மதுரையில் உலகத் தரத்திலான சாலை வசதி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சியில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் 366 பேருக்கு ஓய்வுகால பணிக்கொடை உள்ளிட்டவை வழங்க வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள இவர்களில் 30 சதவிகிதம் ஊழியர்களுக்கு இன்னும் பணிக்கொடை வழங்க வேண்டியுள்ளது. ஜூலை மாதத்துக்குள் அனைவருக்கும் பணிக்கொடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாநகராட்சியில் மொத்தம் 260 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளது. இந்தப் பணியிடங்களையும் இன்னும் ஒரு மாதத்துக்குள் நிரப்ப அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

கூட்டத்தில் கிழக்கு மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி பேசுகையில், கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வரி விதிப்பில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதனால் ஒரு கோடியே 18 லட்சத்து 7 ஆயிரம் வரை நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

ஜூலை 18-க்குள் சென்ட்ரல் மார்க்கெட் செயல்படும்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கணேசன் கேள்விக்கு கமிஷனர் செபாஸ்டின் பதில் அளிக்கையில், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே திறக்கப்பட்ட சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்குவது தொடர்பாகப் பகுதி பகுதியாக ஏலம் விடப்பட்டு வருகிறது. ஜூலை 18-ம் தேதிக்குள் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகள் மாற்றப்பட்டு புதிய சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.