Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

களியக்காவிளை பேரூராட்சிக்கு அபிவிருத்திக் கட்டணம் செலுத்தாத நிறுவனங்கள்: ரூ.19 லட்சம் இழப்பு

Print PDF

தினமணி 23.07.2010

களியக்காவிளை பேரூராட்சிக்கு அபிவிருத்திக் கட்டணம் செலுத்தாத நிறுவனங்கள்: ரூ.19 லட்சம் இழப்பு

களியக்காவிளை, ஜூலை 22: நகர ஊரமைப்புத் துறையின் அனுமதி பெறப்படாமல் பல்வேறு நிறுவனங்கள் அடுக்குமாடி கட்டடம் கட்ட உரிமம் வழங்கியது மற்றும் அபிவிருத்திக் கட்டணம் வசூலிக்காதது போன்றவற்றால் களியக்காவிளை பேரூராட்சிக்கு 2006-07-ம் நிதியாண்டில் ரூ.19,23,908 இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 2002-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியிட்ட அரசாணையில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் கட்டப்படும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டடங்களுக்கு கட்டட உரிமம் வழங்கும் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதில், நகர ஊரமைப்புத் துறையின் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகர ஊரமைப்புத் துறை இயக்குநரகத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட அபிவிருத்திக் கட்டணமாக சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ. 200 வீதம் வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 100 அபிவிருத்தி கட்டணம் வசூலிக்கலாம் என 5.6.2007-ல் வெளியான நகர ஊரமைப்புத் துறை இயக்குநரின் செயல்முறை ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், களியக்காவிளை பேரூராட்சியில் சில தனியார் நிறுவனங்களுக்கு கட்டட உரிமம் வழங்கப்பட்ட போது மேற்கண்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என்பதும், நகர ஊரமைப்புத் துறையால் நிர்ணயம் செய்யப்பட்ட அபிவிருத்திக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 2006-07-ம் ஆண்டுக்கான தணிக்கையின் போது தெரிய வந்துள்ளது.

அந்த கட்டடங்களை நகரமைப்புத் துறை அலுவலர்களைக் கொண்டு ஆய்வு செய்து முறைப்படுத்தப்பட வேண்டும் என்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கட்டடங்கள் அளவு செய்யப்பட்டு சொத்துவரி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் தணிக்கை அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத் தணிக்கை அறிக்கையை பேரூராட்சி மன்றத்தில் பார்வைக்கு வைத்து, பதில்களை உள்ளாட்சி நிதித் தணிக்கை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

களியக்காவிளையைச் சேர்ந்த ஒருவரால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இத் தணிக்கை அறிக்கை பிரதி அண்மையில் பெறப்பட்டது. 106 பக்கங்கள் கொண்ட இத் தணிக்கை அறிக்கையில் வருவாய் இழப்புகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.