Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பில் தேயிலை தோட்டம்: வருவாய் இழப்பில் பேரூராட்சி நிர்வாகம்

Print PDF

தினமலர் 28.07.2010

ஆக்கிரமிப்பில் தேயிலை தோட்டம்: வருவாய் இழப்பில் பேரூராட்சி நிர்வாகம்

மஞ்சூர்:கீழ் குந்தா பேரூராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் தேயிலை தோட்டம் ஆக்கிரமிப்பில் உள்ளதால், நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குந்தா தாலுகாவுக்கு உட்பட்டு கீழ்குந்தா பேரூராட்சி உள்ளது. கடந்த 1987-88 ஆண்டுகளில் கீழ்குந்தா பேரூராட்சி மன்ற தலைவராக இருந்த மஞ்சூர் ஹட்டி கிராமத்தை சேர்ந்த பெள்ளிகவுடர் என்பவரின் முழு முயற்சியால், பேரூராட்சிக்கு வருவாயை ஈட்டும் வகையில் மஞ்சூர் ஹட்டி கிராமத்திற்கு கீழ் பகுதியில் 10 ஏக்கர் தேயிலை தோட்டம் உருவாக்கப்பட்டது.இந்த தோட்டம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்காலும், அரசியல் தலையீடு காரணமாகவும் தேயிலை தோட்டத்தை குந்தாபாலம் பகுதியை சேர்ந்த 20க்கு மேற்பட்டவர்கள் ஆக்கிரமித்து தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களே தேயிலை விவசாயம் செய்து வந்ததால், பேரூராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.தேயிலை தோட்டம் குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு வந்த புகார்களை அடுத்து, நிர்வாகம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கடந்த 2006ம் ஆண்டிலேயே கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்திற்கு சாதகமான முடிவு கிடைத்தது.எனினும், தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களே தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குனரின் ஆய்வில், தேயிலை தோட்டம் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணுமாறு உத்தரவிட்டதை அடுத்து, தற்போது தேயிலை தோட்டத்தை கைப்பற்ற, கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குந்தா வருவாய் துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராமனிடம் கேட்டபோது, ""கீழ்குந்தா பேரூராட்சிக்கு சொந்தமான தேயிலை தோட்டம் குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததில் கடந்த 2006ம் ஆண்டிலேயே பேரூராட்சி நிர்வாகத்திற்கு சாதகமான முடிவு கிடைத்தது. குந்தா வருவாய் துறைக்கு இடத்தை சர்வே செய்து தருமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது. சர்வே செய்த பின்பு தேயிலை தோட்டத்தை கைப்பற்றி சுற்றி வேலி அமைத்து பராமரிக்கப்படும்,'' என்றார்.

கோடி ரூபாய் இழப்பு!: கடந்த 10ஆண்டுக்கு மேலாக கீழ் குந்தா பேரூராட்சிக்கு சொந்தமான தேயிலை தோட்டம் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. 10 ஏக்கர் தேயிலை தோட்டத்தில் மாதந்தோறும் குறைந்தது 5 ஆயிரம் கிலோ வரைக்கு பசுந்தேயிலை பறிக்கப்படுகிறது. 10 ஆண்டுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருப்பதால், கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, பேரூராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடி யில் தத்தளித்து வரும் நிலையில், தேயிலையின் வருமானம் கிடைத்திருந்தால் அனைத்து பணிகளும் தடையின்றி மேற்கொள்ள முடிந்திருக்கும்.