Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர்த் தட்டுப்பாடு: மாற்றுத் திட்டங்களால் வீணாகும் நகராட்சி நிதி

Print PDF

தினமணி 30.08.2010

குடிநீர்த் தட்டுப்பாடு: மாற்றுத் திட்டங்களால் வீணாகும் நகராட்சி நிதி

தேனி, ஆக. 29: தேனியில் குடியிருப்புப் பகுதிகளின் விரிவாக்கம், அதிகரித்து வரும் மக்கள் தொகை ஆகியவற்றிற்கு ஏற்ப குடிநீர்த் திட்டங்களை மேம்படுத்தவும், புதிய குடிநீர் திட்டத்தை உருவாக்கவும் நகராட்சி நிர்வாகம் காலதாமதம் செய்வதால் நகராட்சி நிதி வீணாகி வருகிறது.

நகராட்சிப் பகுதிகளுக்கு பழனிசெட்டிபட்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், அரப்படித்தேவன்பட்டி குடிநீர் திட்ட உறை கிணறுகள், வீரப்ப அய்யனார் கோயில் குடிநீர் திட்டம் ஆகியவற்றில் இருந்து குடிநீர் பம்பிங் செய்து மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் தரைமட்டத் தொட்டிகள் மூலம் குழாய்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இதில் அரப்படித்தேவன்பட்டி வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலம் பம்பிங் செய்யப்படும் குடிநீர் என்.ஆர்.டி. நகர் மேல்நிலைத் தொட்டி, தரைமட்டத் தொட்டி ஆகியவற்றில் சேகரிக்கப்பட்டு 13-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

அரப்படித்தேவன்பட்டி குடிநீர் திட்ட உறை கிணறுகளில் ஆற்றில் நீர்வரத்து அதிகம் உள்ள போதும், ஆறு வறண்டுள்ள காலங்களிலும் குடிநீர் பம்பிங் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் கோடை, மழைக் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும் தற்போதுள்ள குடிநீர் திட்டங்கள் நகர் குடியிருப்பு விரிவாக்கப் பகுதிகளுக்கும், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கும் ஏற்றதாக இல்லை. இதனால் தேனி நகருக்குப் புதிய குடிநீர் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், தேனியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது 15 நாள்களுக்கு ஒருமுறை குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்தும், வாடகை டேங்கர்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கியும் நிலைமையை நகராட்சி நிர்வாகம் சமாளித்து வருகிறது.

அரப்படித்தேவன்பட்டி குடிநீர் திட்ட உறை கிணறுகள், பிரதானக் குழாய், மோட்டார் பம்பு ஆகியவற்றை தாற்காலிகமாக சீரமைக்க ஆண்டுதோறும் நகராட்சி பல லட்சம் ரூபாய் செலவு செய்வதாக நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மேலும், பழனிசெட்டிபட்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. வீரப்ப அய்யனார் கோயில் குடிநீர் திட்டம், அரப்படித்தேவன்பட்டி குடிநீர் திட்ட உறை கிணறுகள் ஆகியவை மூலம் பம்பிங் செய்யப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல், மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் குளோரினேசன் செய்து குழாய்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், மழைக் காலங்களில் குடிநீர் மாசு கலந்து வருவதாக நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில், லோயர்கேம்ப் பகுதியில் பெரியாற்றில் இருந்து தேனிக்கு குடிநீர் கொண்டுவரும் புதிய திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் பல மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றியது.ஆனால், நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, புதிய திட்டத்திற்கான அனுமதி பெறுவதில் நகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் கேட்டதற்கு, லோயர்கேம்ப் பெரியாற்றில் இருந்து குடிநீர் கொண்டுவரத் திட்ட மதிப்பீடு செய்யும் பணி நடைபெறுகிறது என்று தெரிவித்தனர்.இதற்கிடையில், குன்னூர் வைகை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அரப்படித்தேவன்பட்டி குடிநீர் திட்டப் பிரதான குழாயை, நெடுஞ்சாலைத் துறை பாலத்தையொட்டி இரும்பு கர்டர்கள் அமைத்து, அதன்மேல் கொண்டு செல்வதற்காக நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திட்டங்கள் என்ற பெயரில் ஆண்டுதோறும் பொது நிதியை வீணாக்கி வருவதைத் தவிர்த்து, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண புதிய திட்டத்திற்கு அனுமதி பெற்று பணிகளைத் துவக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.