Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அறிவிப்பு 220 பார்க்கிங் பகுதிகளை குத்தகைக்கு விட முடிவு

Print PDF

தினகரன் 22.09.2010

மாநகராட்சி அறிவிப்பு 220 பார்க்கிங் பகுதிகளை குத்தகைக்கு விட முடிவு

புதுடெல்லி, செப். 22: நகரில் 220 வாகன பார்க்கிங் பகுதிகளை குத்தகைக்கு விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 7ம் தேதிக்குள் டெண்டர்களை அனுப்பலாம் என்று அறிவித்துள்ளது.

டெல்லி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாகன பார்க்கிங் பகுதிகளை மறு ஏலம் விட மாநகராட்சி முடிவு செய்தது. உரிமக் காலம் முடிந்தது, உரிமம் பெற்றவர்கள் தொட ர்ந்து நடத்தாமல் திரும்ப ஒப்படைத்தது, முறைகேடுகளால் உரிமம் ரத்து செய்யப்பட்டது என 245 பார்க்கிங்குகள் மறு ஏலத்துக்கு அடையாளம் காணப்பட்டன.

இதில், 25 பார்க்கிங் பகுதிகள் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதால், எஞ்சிய 220 பார்க்கிங்குகளுக்கு ஏலம் விட மாநகராட்சி முடிவு செய்து, பொது அறிவிப்பை வெளியிட்டது.

இதுபற்றி மாநகராட்சியின் வருவாய்த் திட்டப் பிரிவின் தலைவர் அமியா சந்திரா கூறியதாவது:

220 வாகன பார்க்கிங் பகுதிகளை 2 வருட காலத்துக்கு ஏற்று நடத்த உரிமம் வழங்கப்படவுள்ளது. பார்க்கிங் பகுதிகளின் உரிமம் பெற விரும்புபவர்களிடம் இருந்து டெண்டர்கள் வரவேற்கப்படுகின்றன. டெண்டர்களை அனுப்ப கடைசி நாள் அக்டோபர் 7ம் தேதியாகும். அன்றைய தினமே டெண்டர்கள் பிரிக்கப்படும்.

220ல் 40 பார்க்கிங் பகுதிகளுக்கான மறு ஏலப் பணிகள் நடந்து வருகின்றன. எஞ்சிய 180 பார்க்கிங்குகளில் 80 பொதுப்பணித் துறையின் சாலைகளில் அமைந்துள்ளன. அவைகளுக்கு அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளன. எஞ்சிய 100 பார்க்கிங் பகுதிகளுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

மாநகராட்சியின் வருவாயைப் பெருக்கவும், போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் அந்த 100 இடங்களையும் முறைப்படுத்த முயற்சித்து வருகின்றோம். இந்த விவகாரத்தை போக்குவரத்து போலீசின் உயரதிகாரிகள் கவனத்துக்கொண்டு சென்று, புதிய வழிமுறைகளை வகுக்கும்படி கேட்டிருக்கிறோம். சில பார்க்கிங் பகுதிகளுக்கு போக்குவரத்து போலீஸ் சான்றிதழ் வழங்கிவிட்டது.

ஒப்புதல் சான்றிதழ் கிடைக்காத பார்க்கிங் பகுதிகளுக்காக வரப்பெற்ற டெண்டர்கள் ரத்து செய்யப்படும். இவ்வாறு அமியா சந்திரா கூறினார்.

7ம் தேதி டெண்டர்கள் பிரிக்கப்படும்பட்சத்தில், காமன்வெல்த் போட்டிகளுக்குப்பிறகு புதிய உரிமதாரர்கள் பார்க்கிங் பகுதிகளை ஏற்று நடத்துவார்கள் என்று தெரிகிறது.