Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மேம்பாட்டு பணி அரசு ரூ3 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன்               10.11.2010

மாநகராட்சி மேம்பாட்டு பணி அரசு ரூ3 கோடி ஒதுக்கீடு

திருச்சி, நவ. 10: மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ3 கோடியை திருச்சி மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஏற்கனவே ரூ50 லட்சம் செலவில் 2 பயணிகள் மற்றும் பேருந்துகளுக்கான மேற்கூரை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் தில்லைநகர், உறையூர், பாலக்கரை மற்றும் இதர நகர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடம் மேற்கூரை அமைக்கப்படாமல் உள்ளது. தற்போது இந்த பகுதியிலும் பிரம்மாண்டமாக இரண்டு மேற்கூரைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் இங்கு புதிய தளம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ1கோடி நிதி வழங்கியுள்ளது.

உய்யக்கொண்டான் ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் போது வயலூர் ரோடு சீனிவாச நகர் பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் காத்தரி வாய்க்காலின் தொட்டி வாய்க்கால் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து 4 கிலோ மீட்டர் தூரம் இந்த வாய்க்காலில் 400 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கான ரூ50 லட்சம் நிதியையும் தமிழக அரசு வழங்கியுள்ளது.

அரியமங்கலம் குப்பை கிடங்கில் லாரிகள் சென்று வருவதற்கான சாலை உள்ளது. இந்த சாலை பழுதடைந்திருந்ததால் குப்பை லாரிகள் மற்றும் இயந்திரங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் இந்த பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதியையும் சேர்த்து மொத்தம் ரூ3 கோடியை இயக்குதல் மற்றும் பராமரித்தல் இடை நிரப்பும் நிதியின் கீழ் தமிழக அரசு வழங்கியுள்ளது. இது நூறு சதவீத மானியமாகும். இந்த பணிகளுக்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.