Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வழிபாட்டு தலங்கள் ,6 சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பயண்பாடு ஒழிக்க ரூ 30 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 30.12.2009

வழிபாட்டு தலங்கள் ,6 சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பயண்பாடு ஒழிக்க ரூ 30 லட்சம் ஒதுக்கீடு

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் உள்ள 9 வழிபாட்டு தலங்கள் மற்றும் 6 சுற்றுலா தலங்களில்,பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முழுவதுமாக ஒழிக்க தமிழக அரசு 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என்று மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்த ராஜன் தெரிவித்தார்.சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுச் சூழல் நலனை கருத்தில் கொண்டு பிளாஸ்டடிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி டவுண் பஞ்.,க்கு உட்பட்ட பகுதிகளில் தாராளம் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்.,நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி விவேகானந்தபுரம் ஜங்சனில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்த ராஜன்,மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி அரிராதா கிருஷ்ணன்,கன்னியாகுமரி டவுன் பஞ்., செயல் அலுவலர் ராசையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் புத்தளம் எல்.எம்.பி.சி பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் கலந்து கொண்டு சுற்றுலா வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த கையேடுகளை வழங்கினர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்த ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது;தமிழ்நாட்டில் பழனி,வேளாங்கண்ணி,மதுரை,திருத்தணி,திருச்செந் தூர்,திருவண்ணாமலை,திருவாரூர்,நாகூர்,ராமேஸ்வரம் ஆகிய 9 வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கன்னியாகுமரி,குற்றாலம்,கொடைக்கானல், ஊட்டி,ஏற்காடு,மாமல்லபுரம் ஆகிய 6 சுற்றுலா தலங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முழுவதுமாக கட்டுப்படுத்த தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த தொகை அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க, சுற்றுலா பயணிகள் அறியும் வகையில் பிளாஸ்டிக் கப்,கேரி பேக் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாக பேப்பர் மற்றும் அட்டைகளால் தயாரிக்கப்பட்ட கப்,கேரி பேக் ஆகியவற்றை கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.பஞ்.,கள்,மாநக ராட்சிகள் மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் சார்பில் போடப்பட்டுள்ள தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த தொகை செலவிடப்படும்.

குமரி மாவட்டத்தில் மாவட்ட டி.ஆர்.,சுற்றுலா அலுவலர்,பஞ்.,செயல் அலுவலர்,தொண்டு நிறுவனங்கள்,தேவசம்போர்டு ஆகியவற்றின் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு,பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கலைக்குழு மூலமும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும்.தொடர்ந்து இதுகுறித்து ஒரு வாரம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் கன்னியாகுமரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் விழிப்புணர்வு குறித்து சுற்றுலாப் பயணிகளிடம் வலியுறுத்தினர்.

Last Updated on Wednesday, 30 December 2009 06:58