Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு வழங்குமா ரூ.50 லட்சம்? கருமத்தம்பட்டி பேரூராட்சி எதிர்பார்ப்பு

Print PDF

தினமலர் 26.04.2010

அரசு வழங்குமா ரூ.50 லட்சம்? கருமத்தம்பட்டி பேரூராட்சி எதிர்பார்ப்பு

சோமனூர் : உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பான வளர்ச்சிப் பணிகளால் கருமத்தம்பட்டி பேரூராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய 50 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஜூன் மாதம் கோவையில் நடக்கிறது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய ரோடுகள் போடும் பணி, அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூர், கருமத்தம்பட்டி பகுதிகளில் மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இது தவிர, சோமனூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணியும் தற்போது துவங்கி நடந்து வருகிறது. இதற்காக இரண்டு மாற்று வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்காக ரோட்டோரம் தோண்டப்பட்ட குழிகளால், கருமத்தம்பட்டி நால் ரோடு, சோமனூர் மெயின் ரோடு, பவர் ஹவுஸ் ரோடு, சந்தைபேட்டை, மில் ரோடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துப் பகுதிகளிலும் சாக்கடை கால்வாய்கள் உடைக்கப்பட்டுள்ளன. அத்திக்கடவு குடிநீர் திட்ட பிரதான குழாய்கள், வினியோக குழாய்கள், போர்வெல்கள், வினியோக குழாய்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன. ஏராளமான தெரு விளக்குகள் அப்புறப்படுத்தப்பட்டு, இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணியில் ஏராளமான விளக்குகள் மற்றும் உபகரணங்கள் சேதமடைந்து, மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம் கூறியதாவது: ரோடு பணிகள் முறையாக திட்டமிட்டு செயல்படுத்தாததால் பொதுமக்களுக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடி நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குடிநீர் வினியோகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட சாக்கடை கால்வாய், சேதமடைந்த குழாய்கள், தெரு விளக்குகள் உள்ளிட்டவற்றை சீரமமைக்க 50 லட்சம் ரூபாய் செலவாகும். இந்த பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு, மகாலிங்கம் தெரிவித்தார்.

Last Updated on Monday, 26 April 2010 06:18