Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூரில் நடப்பாண்டு 340 பூங்காக்கள்: பி.எஸ். எடியூரப்பா

Print PDF

தினமணி          14.05.2010

பெங்களூரில் நடப்பாண்டு 340 பூங்காக்கள்: பி.எஸ். எடியூரப்பா

பெங்களூர், மே 13: பெங்களூரில் நடப்பு நிதியாண்டில் சுமார் 340 பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.

பெருநகர பெங்களூர் மாநகராட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 198 வார்டுகளின் கவுன்சிலர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை துவங்கியது.

இந்த முகாமை முதல்வர் எடியூரப்பா குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்தார். இந்த விழாவில் மாநகராட்சி மேயர் எஸ்.கே. நடராஜ், துணை மேயர் தயானந்த், அமைச்சர்கள் ராமச்சந்திர கெüடா, அசோக், மும்தாஜ் அலிகான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் முதல்வர் பேசியது: உங்களுக்கான (கவுன்சிலர்கள்) பயிற்சி முகாமை துவக்கி வைக்கும்போது எனக்கு பழைய காலம் நினைவுக்கு வருகிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நான் ஷிமோகா மாவட்டத்தில் ஷிகாரிபுரம் நகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தேன். எனது கடுமையான உழைப்பால் நகர சபைத் தலைவரானேன்.

அப்போது தினமும் அதிகாலை எழுந்தவுடன் 2 மணி நேரம் நகரைச் சுற்றி வருவேன். அப்போது, அனைத்து தரப்பு மக்களின் குறைகளையும் நேரில் கேட்டு அறிந்துகொள்வேன். குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். அதேபோல நீங்களும் பெங்களூரில் உங்களது வார்டுகளில் காலை நேரம் மக்களின் குறைகளைக் கேட்டு அவர்களது பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்காளர்கள்தான் நமக்கு முதலாளிகள். அவர்களுக்குக் கஷ்டம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. உண்மையான கட்சித் தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் என்றைக்கும் மறக்க வேண்டாம். அவர்களுடன் எப்போதும் தொடர்போடு இருங்கள்.

நகரில் இதுவரை 654 பூங்காக்கள்: கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு பெங்களூரில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 654 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் மேலும் 340 பூங்காக்கள் அமைக்கப்படும்.

÷நகரில் இன்னும் 3 ஆண்டுகளில் சுமார் ரூ.22 ஆயிரம் கோடி செலவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

மெட்ரோ ரயில், மோனோ ரயில், புறநகர் ரயில், அதிவேக ரயில், சிக்னல் இல்லா சாலைகள், மேம்பாலங்கள் கட்டுவது போன்ற முக்கிய திட்டங்கள் அதில் அடங்கும். இந்த திட்டங்களை செயல்படுத்த அனைத்து கவுன்சிலர்களும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டத்தில் நானும் கலந்துகொள்ள விரும்புகிறேன். அடுத்த கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களது வார்டு பிரச்னைகளை அறிந்துகொள்கிறேன் என்றார் அவர்.