Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விரிவாகும் கூடலூர் நீரோடை ரூ.2 லட்சத்தில் துவங்கியது பணி

Print PDF

தினமலர்    17.05.2010

விரிவாகும் கூடலூர் நீரோடை ரூ.2 லட்சத்தில் துவங்கியது பணி

கூடலூர் : கூடலூர் நகரை ஒட்டியுள்ள நீரோடையை தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூடலூர், பந்தலூர் பகுதிகளிலுள்ள பெரும்பாலான ஆறு, நீரோடைகள் போதிய பராமரிப்பு இல்லாமலும், ஆக்கிரமிப்பு உள்ளதாலும் மழை காலத்தின் போது, நகருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவது வழக்கமாக உள்ளது. நீராதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர் வார வேண்டும் என பல தரப்பினர் வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளவில்லை.

கடந்த ஜூலை மாதம் பெய்த மழையில், கூடலூர் தேவர்சோலை சாலை முதல் மைல், இரண்டாவது மைல், பாடந்துரை, தொரப்பள்ளி, புத்தூர்வயல், அத்திப்பாலி, புளியாம்பாறை, பந்தலூர் சேரம்பாடி, எருமாடு உட்பட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.

எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, நீராதாரங்களில் தூர் வார வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

தற்போது, மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, பல பகுதிகளில் தூர் வாரப்பட்டு வருகின்றன. கூடலூர் நகரை ஒட்டியுள்ள நீரோடைகளை தூர் வார எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கூடலூர் நகராட்சியின் பொது நிதியிலிருந்து 2 லட்சம் ஒதுக்கி, துப்புகுட்டிபேட்டை கல்குவாரி முதல் காசிம்வயல் வரை உள்ள நீரோடை தூர் வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது.

கவுன்சிலர் உஸ்மான் கூறுகையில், ''மழையின் போது இப்பகுதி பாதிக்காமல் இருக்க, நீரோடையில் குறிப்பிட்ட பகுதி, நகராட்சி மூலம் தூர் வாரப்படுகிறது. கோக்கால் பகுதியில் உற்பத்தியாகி நகர் வழியாக செல்லும் நீரோடையை சர்வே செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி முழுமையாக சீரமைத்தால் தான், வருங்காலத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்,'' என்றார்.