Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூங்கா மதுரையை தூய்மைப்படுத்த 4 நாள் திட்டம்: ஆட்சியர்

Print PDF

தினமணி     20.05.2010

தூங்கா மதுரையை தூய்மைப்படுத்த 4 நாள் திட்டம்: ஆட்சியர்

மதுரை, மே 19: இந்த மாதம் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நான்கு நாள்கள், மதுரை மாவட்டம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் தெரிவித்தார்.

மதுரையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:

மதுரை மாவட்டத்தில் நான் ஆய்வு மேற்கொண்ட போது, பல இடங்களில் குப்பைகள் குவிந்துகிடந்தன.

இதையடுத்து தூங்கா நகரம் என பெயர் பெற்ற மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மே 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நான்கு நாள்கள் கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி ஆகிய இடங்களில் குப்பைகளை அகற்றி மாவட்டம் முழுவதும் தூய்மையாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கிராமங்களைப் பொருத்தவரை ஊராட்சி மன்றத் தலைவர்கள் இப்பணியை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

சாலைப் பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர், எக்ஸ்னோரா அமைப்பினர், தானம் அறக்கட்டளை, நேரு யுவகேந்திரா அமைப்பினர், வர்த்தக சங்கத்தினர், அரிமா மற்றும் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

நான் பதவியேற்ற பிறகு இதுவரை 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தினேன். அப்போது கிராம மக்கள் தெருவிளக்கு, குடிநீர் பிரச்னை உள்ளிட்டவை குறித்து பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர். எங்கு குடிநீர்ப் பிரச்னை அதிகம் உள்ளதோ அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு போட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

மதுரை மாவட்டத்தில் 7 தாலூகாக்களில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. மேலூர் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு நான் தலைமைவகித்த போது 2,500-க்கும் மேலான மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 1,500 மனுக்கள் பட்டா மாறுதல் கேட்டு வந்தவை. இவர்களுக்கு பட்டா மாறுதல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல முதியோர் உதவித்தொகை கேட்டு மனுக்கள் வந்துள்ளன. தகுதி வாய்ந்தவர்களுக்கு அவை வழங்கப்படும்.

குடிநீர்:

வைகை அணையில் இன்றைய நிலவரப்படி 31 அடி தண்ணீர் உள்ளது. மதுரை மாவட்டத் தண்ணீர் தேவைக்கு நாள் ஒன்றுக்கு 6 மி. கன அடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இருப்பில் உள்ள நீரின் அளவைக் கொண்டு இன்னும் 51 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியும்.

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இப்பணிக்கென (மாநகராட்சி நீங்கலாக) மதுரை மாவட்டத்தில் கணக்கெடுப்பாளர்கள் 3940 பேரும், கண்காணிப்பாளர்கள் 648 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கணக்கெடுப்பாளர்கள் வரும்போது வீட்டில் இருப்பவர்களின் பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம், குடும்பத்தில் வசிப்பவர்களின் பெயர் விவரம், தற்போது வசிக்கும் முகவரி, நிரந்தர முகவரி ஆகியவற்றை பொதுமக்கள் தெரிவித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான பணி 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. எஞ்சிய பணிகளும் இன்னும் சில தினங்களில் முழுமை பெற்றுவிடும்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்:

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 4,63,313 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 20,228 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் 27 மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைக்காக 6,432 பேர் பரிந்துரைக்கப்பட்டு 5,689 பேருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகள் 2,269. பிற மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் 3,420. இதற்காக ரூ.17 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

"தினமணி'க்குப் பாராட்டு

உசிலம்பட்டி அருகே கே.நாட்டாப்பட்டி ஊராட்சித் தலைவி ராமுத்தாய், இடிந்த நிலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார், அவரது வீட்டுக்கு பட்டா இல்லை என்ற செய்தி தினமணியில் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவிக்கு உடனடியாக பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

சிறப்புச் செய்தியாக வெளியிட்டு இந்த விஷயத்தை எனது கவனத்துக்குக் கொண்டுவந்த தினமணிக்கு எனது பாராட்டுகள்.

பொதுவாக அரசின் நல்ல செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லவும், தவறுகளைச் சுட்டிக்காட்டவும், பிரச்னைகளை எடுத்துரைக்கவும் பத்திரிகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.

மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்னைகளை எனது கவனத்துக்கு பத்திரிகைகள் அவ்வப்போது கொண்டுவந்தால் அதற்கு உடனடி தீர்வுகாணப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன் என்றார் ஆட்சியர்.