Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

யமுனையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1,358 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்

Print PDF

தினகரன்    21.05.2010

யமுனையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1,358 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்

புதுடெல்லி, மே 21: யமுனையில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துவதற்காக நஜாப்கார், சப்ளிமென்டரி மறறும் சதாராவில் பாதாள சாக்கடை அமைக்கும் ரூ.1,357.71 கோடி செலவிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யமுனையில் நாளுக்கு நாள் அசுத்தம் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், அங்கீகரிக்கப்படாத குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் யமுனையில் கலப்பதுதான். இதை பாதாள சாக்கடை அமைத்து அமைத்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திருப்பிவிட்டால், யமுனை நதி சுத்தமாக வாய்ப்புள்ளது. இதற்காக ரூ.1,357.71 கோடி மதிப்பீட்டில் டெல்லி குடிநீர் வாரியம் சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக இந்த திட்டம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உள்கட்டமைப்புகளுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் யமுனையை சுத்தப்படுத்தும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இத்திட்டத்துக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் இதுகுறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறியதாவது:

யமுனையை சுத்தப்படுத்தும் மாபெரும் திட்டம் இது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புத்தாக்க திட்டத்தின் கீழ் ரூ.1,358 கோடி செலவில் நஜாப்க0ர், சப்ளிமென்டரி, சதாராவில் சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தடுக்க அப்பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திருப்பிவிடப்படும். இதேபோல் ஏற்கனவே சாக்கடை வசதி உள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக யமுனையில் கலக்கப்படுகிறது. அதையும் தடுத்து நிறுத்தி சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இத்திட்டத்தில் 35 சதவீத தொகையை மத்திய அரசும், 15 சதவீதத்தை டெல்லி மாநில அரசும், டெல்லி குடிநீர் வாரியம் 50 சதவீத தொகையையும் தரும்.