Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொசுக்களை ஒழிக்க ரூ.3 கோடியில் புகை அடிக்கும் இயந்திரங்கள் மாநகராட்சி வாங்குகிறது

Print PDF

தினகரன் 07.06.2010

கொசுக்களை ஒழிக்க ரூ.3 கோடியில் புகை அடிக்கும் இயந்திரங்கள் மாநகராட்சி வாங்குகிறது

புதுடெல்லி, ஜூன் 7: காமன்வெல்த் போட்டிகளையொட்டி, கொசு ஒழிப்பு பணிக்காக ரூ.3 கோடி செலவில் கொசு மருந்து புகையடிக்கும் இயந்திரங்களை மாநகராட்சி வாங்குகிறது.

டெல்லியில் அக்டோபர் மாதத்தில் டெங்கு காய்ச்சல் அதிதீவிரமாக பரவும். இந்த ஆண்டு அக்டோபர் 3ம்தேதி முதல் 14ம்தேதி வரையில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவிருப்பதால் கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாநகராட்சியின் ரோகிணி, நஜப்கர் ஆகிய இரு மண்டலங்களில் கொசு மருந்து புகையடிக்கும் இயந்திரத்துடன் கூடிய வாகனங்கள் ஒன்றுகூட இல்லை. மற்ற 10 மண்டலங்களில் தலா ஒரு வாகனம் உள்ளன. டெங்கு காய்ச்சல் பரவும் காலத்தில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா 2 கொசு மருந்து அடிக்கும் வாகனங்கள் தேவைப்படுகிறது. ஆகவே, கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்துடன் கூடிய 14 வாகனங்களை புதிதாக வாங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரோகிணி, நஜப்கர் மண்டலங்களுக்கு தலா 2 வாகனங்கள் ஒதுக்கப்படும். எஞ்சிய 10 மண்டலங்களுக்கு தலா ஒரு வாகனம் வழங்கப்படும். 14 கொசு மருந்து அடிக்கும் வாகனங்கள் ரூ.1.20 கோடி செலவில் வாங்கப்படுகின்றன. 2 வருட பாதுகாப்பு உத்தரவாதம், 3 வருட பராமரிப்பு ஆகிய ஒப்பந்தங்களுடன் இந்த வாகனங்கள் வாங்கப்படுகின்றன. இதுதவிர, கையால் கொசு மருந்து அடிக்கும் 247 இயந்திரங்கள் ரூ.1.78 கோடி செலவில் வாங்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.