Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1081 கோடி வளர்ச்சி பணிகள்

Print PDF

தினகரன் 14.06.2010

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1081 கோடி வளர்ச்சி பணிகள்

சென்னை, ஜூன் 14: சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.21 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, துணை முதல்வர் மு..ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை ஈ.வெ.ரா பெரியார் சாலை, கடப்பா ரங்கையா தெரு சந்திப்பில், மாநகராட்சி சார்பில் 1,850 சதுர அடியில் ரூ.21 லட்சத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. மத்திய சென்னை எம்.பியும், மத்திய ஜவுளித் துறை அமைச்சருமான தயாநிதி மாறன், அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

புதிய கட்டிடத்தை துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைத்து, மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அலுவலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார். பின்னர், மு..ஸ்டாலின் முன்னிலையில், தொகுதி மக்களின் மனுக்களை தயாநிதி மாறன் பெற்றுக் கொண்டார். மருத்துவ உதவி, சாலை வசதி, குடிநீர் வசதி, ஹஜ் பயண அனுமதி உட்பட பல்வேறு உதவிகள் கேட்டு பொது மக்கள் மனு கொடுத்தனர்.

அதன்பின், நிருபர்களிடம் துணை முதல்வர் மு..ஸ்டாலின் கூறியதாவது:

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் தயாநிதி மாறன், பொது மக்களிடம் குறைகளை கேட்டு, உடனடியாக நிவர்த்தி செய்ய வசதியாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி மக்கள் குறைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க, சென்னை மாநகராட்சி சார்பில் மணியக்கார சத்திரத் தெருவில் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, காக்ரேன் பேசின் மேம்பாலம், ரங்கராஜபுரம் மேம்பாலம், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மேம்பாலம் என 2 சுரங்கப்பாதைகள், 3 மேம்பாலங்கள் ரூ.92 கோடியே 42 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளன. 1000 புதிய மின்விளக்குகள் ரூ.3 கோடியிலும், அண்ணா நகர் டவர் பூங்கா, டாக்டர் நடேசன் பூங்கா உட்பட பல பூங்காக்கள் என ரூ.10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் மழைநீரை அகற்ற 12 நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 502 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள் ரூ.814 கோடியே 86 லட்சத்திலும், பெரம்பூர் நவீன ஆட்டு இறைச்சி கூடம் ரூ.60 கோடியிலும், தண்டையார்பேட்டையில் நவீன தொற்றுநோய் மருத்துவமனை கட்டிடம் ரூ.21 கோடியே 53 லட்சத்திலும், விக்டோரியா பப்ளிக் ஹால் புனரமைக்கும் பணிகள் ரூ.3 கோடியே 36 லட்சத்திலும் மேற்கொள்ளப்படுகின்றன.

சாலையோர வியாபாரிகளுக்கான கடைகள் கட்டும் பணிகள் ரூ.5 கோடியே 20 லட்சத்திலும், 8 இடங்களில் 24 மணி நேரம் இயங்க கூடிய அவசர கால பேறு மையம் ரூ.16 கோடியே 30 லட்சத்திலும், மண்டலம் 2, மண்டலம் 5க்கான நவீன அலுவலக கட்டிடம் ரூ.15 கோடியே 86 லட்சத்திலும் என மொத்தம் ரூ.1081 கோடியே 26 லட்சத்தில் மாநகராட்சி மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு மு..ஸ்டாலின் கூறினார்.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசுகையில், ‘மத்திய சென்னை எம்.பி தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. இந்த தொகுதி மக்களின் பிரச்னைகள் தீர்க்கவும், பொதுமக்களை நேரில் சந்திக்கவும் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி மக்கள் குறைகள், தேவைகள் இருந்தால் மனுக்களாக தினமும் கொடுக்கலாம்என்றார்.

நிகழ்ச்சியில் மு..தமிழரசு, செல்விசெல்வம், மோகனா தமிழரசு, எம்.பிக்கள் ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, திமுக மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு, துணை மேயர் சத்தியபாமா, கவுன்சிலர்கள் ராமலிங்கம், சைதை ரவி, ஏகப்பன், அன்புதுரை, ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ராஜாத்தி, வணிக நலவாரிய உறுப்பினர் சேப்பாக்கம் வி.பி.மணி, வக்கீல் நன்மாறன், கமிஷனர் ராஜேஷ் லக்கானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.