Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூவம் சீரமைக்க காலம் நிர்ணயிக்க இயலாது சிங்கப்பூர் நிறுவனம் திட்டவட்டம்

Print PDF

தினமலர் 18.06.2010

கூவம் சீரமைக்க காலம் நிர்ணயிக்க இயலாது சிங்கப்பூர் நிறுவனம் திட்டவட்டம்

சென்னை:""கூவம் நதி அதிக கி.மீ., தூரம் கொண்டது என்பதால், அதை சீரமைப்பதற்கு கால நிர்ணயம் செய்ய இயலாது,'' என்று சிங்கப்பூர் குழுவினர் தெரிவித்தனர்.கூவம் நதியை சீரமைக்க, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துக்கும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதனடிப்படையில், சீரமைப்பதற்கான திட்டம் தயாரிக்கும் முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இதுபற்றிய ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தலைமை செயலர் ஸ்ரீபதி, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அல்போன்சஸ் சியா, சிங்கப்பூர் பொது உபயோக வாரியத்தின் பொது மேலாளர் ராஜிவ் தீட்சித், துணை தலைவர் வினோத் சிங், சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்தின் வெளியுறவு துறை அலுவலர் அன்னா நங் மற்றும் தமிழக நிதித்துறை செயலர் சண்முகம், மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்துக்கு பின், சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவன தலைமை செயல் அலுவலர் அல்போன்சஸ் சியா நிருபர்களிடம் கூறியதாவது:கூவம் சீரமைப்பு திட்டத்துக்கான முதல் கட்ட பணிகள் முடிந்துள்ளன. இரண்டாவது கட்ட பணிகள் விரைவில் துவக்கப்படும். இரண்டாம் கட்ட பணிக்கான திட்ட அறிக்கையை முடிவு செய்ய 12 மாதங்களாகும். அதன்பின் திட்டம் துவக்கப்பட்டு, கூவம் சீரமைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கும், அரசுக்கும் உள்ளது.இத்திட்டம் எப்போது முடிவு பெறுமென கூற முடியாது. சிங்கப்பூரில் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த 10 முதல் 12 ஆண்டுகள் ஆனது. இங்கு கூவம் நதி அதிக கி.மீ., தூரம் கொண்டது. எனவே, பணியை முடிக்க கால நிர்ணயிக்க இயலாது.இவ்வாறு அல்போன்சஸ் சியா கூறினார்.