Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் தயார் நிலையில் 40 நவீன பூங்காக்கள்

Print PDF

தினமணி 18.06.2010

கோவையில் தயார் நிலையில் 40 நவீன பூங்காக்கள்

கோவை, ஜூன் 17: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரில் உருவாக்கப்பட்ட 40 நவீன பூங்காக்கள் திறப்பு விழாவுக்காக தயார் நிலையில் உள்ளன.

பிற நகரங்களை ஒப்பிடும்போது தொழில் நகரமான கோவையில் பொழுதுபோக்கு அம்சங்கள் மிகவும் குறைவு. ..சி. பூங்காவைத் தவிர பெரிய அளவிலான பூங்காக்கள் ஏதும் கோவையில் இல்லை. இக்குறையைப் போக்கும் வகையில் கோவை மாநகராட்சி சார்பில் 40 நவீன பூங்காக்கள் உருவாக்க ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

மாநகராட்சிக்குச் சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடங்களில் (ரிசர்வ் சைட்) இப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெங்களூர், ஹைதராபாத், புதுதில்லி உள்ளிட்ட நகரங்களில் இருப்பது போல நவீன முறையில் இப்பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள், முதியோர், இளம்வயதினர் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இப்பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. மனதை ரம்மியப்படுத்தும் புல்வெளிகள், செயற்கை நீரூற்றுகள், குழந்தைகளை குதூகலப்படுத்தும் சறுக்கு விளையாட்டு உபகரணங்கள், ஊஞ்சல் உள்ளிட்டவை அமைப்பட்டுள்ளன.

முதியோர் அமர்ந்து மனம்விட்டு பேசும் வகையில் பிரத்யேக இருக்கைகள், இளைஞர்கள், பெரியோர்களுக்காக நடைப்பயிற்சித் தளங்கள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இப் பூங்காக்களில் உள்ளன. இரவு நேரங்களில் கண்களை கவரும் வகையில் வண்ண விளக்குகளும் இப்பூங்காக்களில் பொருத்தப்பட்டுள்ளன.

அனைத்து புதிய பூங்காக்களுக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பூங்கா என பெயர் சூட்ட மாநகராட்சி மாமன்றத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சில பூங்காக்களை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, மேயர் ஆர்.வெங்கடாசலம், துணைமேயர் நா.கார்த்திக் ஆகியோர் ஏற்கெனவே திறந்து வைத்துவிட்டனர்.

மற்ற பூங்காக்களின் பணிகளும் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளன. அனைத்து பூங்காக்களிலும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நினைவுப் பூங்கா எனப் பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது.

மகளிர் பூங்கா: சாய்பாபா காலனியில் (62-வது வார்டு) மகளிர் மட்டும் பயன்படுத்தும் வகையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நினைவு மகளிர் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இப் பூங்காவில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பெண்களுக்கான நடைபயிற்சி தளங்கள், யோகா பயிற்சி செய்ய தனி அரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.