Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

95 ஏக்கரில் பசுமைப் பூங்கா: மேயர் தகவல்

Print PDF

தினமணி 27.07.2010

95 ஏக்கரில் பசுமைப் பூங்கா: மேயர் தகவல்

பெருங்குடியில் மேற்கொள்ளப்பட இருக்கும் திடக் கழிவு மேலாண்மை திட்டத்துக்கான மாதிரி வரைபடத்தை பார்வையிடுகிறார் சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன்

சென்னை, ஜூலை 26: சென்னை பெருங்குடியில் 95 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேயர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:

பெருங்குடியில் நாள்தோறும் 1,400 டன் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றமும், கொசுத் தொல்லையும் அதிகமாகி சுகாதாரச் சீர்கேடு இப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இதனைப் போக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பணிகள் இன்னும் பத்து நாள்களில் முழு வீச்சில் தொடங்க இருக்கின்றன.

இந்த திட்டத்தின் மூலம், குப்பைகளை களைய அறிவியல் முறை மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் ரூ. 69.50 கோடி செலவில் வடிவமைத்தல், கட்டுதல், பராமரித்தல் மற்றும் ஒப்படைத்தல் ஆகிய நிலைகளில் பணிகள் நடைபெறும். குப்பைக் கழிவுகளை பிரித்தெடுக்கும் போது சுகாதாரக் கேடு உண்டாகாமல் இருக்க மறுசுழற்சி, எரிகட்டிகள் தயாரித்தல் ஆகிய முறைகள் கையாளப்பட உள்ளன.

இந்த திட்டத்துக்கு 30 ஏக்கர் நிலம் மட்டும் பயன்படுத்தப்பட உள்ளதால் மீதமுள்ள 95 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமை நிறைந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்கா இந்தியாவிலேயே பெரிய பூங்காவாக விளங்கும் என்றார் அவர்.

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, மாநகராட்சி கவுன்சில் எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, துணை மேயர் ஆர். சத்தியபாமா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.