Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூகலூரில் ரூ.1.70 கோடியில் வளர்ச்சிப்பணிகள்

Print PDF

தினமலர் 02.08.2010

கூகலூரில் ரூ.1.70 கோடியில் வளர்ச்சிப்பணிகள்

கோபிசெட்டிபாளையம்: ""கூகலூர் டவுன் பஞ்சாயத்தில் ஓராண்டில் ஒரு கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்புலான வளர்ச்சி பணி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன,'' என, தலைவர் நஞ்சப்ப கவுண்டர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மக்களின் அடிப்படை பிரச்னைகளான குடிநீர் வசதி, பாதை, கான்கிரீட் தளம், தெருவிளக்கு பராமரிப்பு, சாக்கடை வசதி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 2008-09ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 50 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய தார் ரோடுகள், சமுதாயக் கூடம் கட்டுதல், சாக்கடை, கான்கிரீட் தளம் மற்றும் ரோடுகள், குளம் பராமரிப்பு, வணிக வளாகம், மயான மேம்பாடு ஆகிய பணிகள் செய்யப்பட்டுள்ளன. 2009-10ல் 12வது மான்யம் முதல் மற்றும் இரண்டாவது தவணை திட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு ஐந்து லட்சத்து 75 ஆயிரம் செலவில் புதிய டிராக்டர் மற்றும் டிரைலர் வாங்கப்பட்டுள்ளது.

வார்டு எண் 7ல் விநாயகா கோவில் வீதி சந்து பகுதியில் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வடிகால் வசதி, ஆறாவது வார்டு பழனி வீதியில் 60 ஆயிரம் ரூபாய் செலவில் வடிகால் மற்றும் கல்வெட்டுகள், வார்டு 12ல் மாலா கோவில் வீதியில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை வசதி, பெருங்கம்மாள் வீதியில் 75 ஆயிரம் செலவில் வடிகால் கட்டும் பணியும் செய்யப்பட்டுள்ளன. 2009-10 நபார்டு திட்டத்தின் கீழ் 18 லட்ச ரூபாய் செலவில் தாழக்கொம்புதூர் முதல் சக்கராப்பாளையம் வாய்க்கால்புதூர் செல்லும் சாலை, 17 லட்ச ரூபாய் செலவில் சாணர்பாளையம் மெயின் ரோடு முதல் புதுக்கரைபுதூர் பொலவகாளிப்பாளையம் மெயின் சாலை, கூகலூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் செல்லும் சாலை மேம்பாடு செய்து புதிய தார் சாலை அமைக்கப்படுகிறது.நிதி பற்றாக்குறையை ஈடு செய்யும் திட்டத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்பில் கூகலூர் டவுன் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

தாழக்கொம்புதூர்- ஓடத்துறை மெயின் ரோட்டில் 23 லட்சத்து 20 ஆயிரம் செலவில் வடிகால் கட்டுதல், ஆறு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பாரதி நகர் காலனியில் வடிகால் பணிகள், மூன்று லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் பாரதி நகர் காலனி மெயின் மற்றும் குறுக்கு வீதிகளில் தார் சாலை அமைக்கப்பட உள்ளன. கவுண்டன்புதூர் காலனி நான்காவது வீதியில் 13 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வடிகால் வசதி, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிசை பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 58 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 65 பேருக்கு புதிய வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன.கூகலூர் டவுன் பஞ்சாயத்து செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்து வரும் மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குநர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆறுமுகம் உடனிருந்தார்.