Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொடைக்கானலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர்

Print PDF

தினமணி 02.08.2010

கொடைக்கானலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர்

கொடைக்கானல், ஆக. 1: சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், கொடைக்கானலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ம.வள்ளலார் தெரிவித்தார்.

கொடைக்கானல் நகராட்சியும், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினரும் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி, கொடைக்கானல் நகர்மன்ற அரங்கில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் ராஜன் வரவேற்றார்.

இதில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அப்துல்கனி ராஜா பேசியதாவது:

கொடைக்கானலில் 3 மாத சீசன் காலங்களில் மட்டும் வருவாய் கிடைக்கிறது. இதனை வைத்தே அடுத்த 9 மாத காலத்திற்கு செயல்பட வேண்டிய சூழ்நிலை.

நகரில் நூற்றுக்கணக்கான வீடுகள் லாட்ஜ்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அனுமதியற்ற விடுதிகள் இருந்து வருகின்றன. இதனால் உரிமம் பெற்று நடத்தி வரும் காட்டேஜ்கள், ஹோட்டல்கள் பாதிக்கப்படுகின்றன. லாட்ஜ்களுக்கு வரி விதிப்பை வரைமுறைப்படுத்த வேண்டும். சுற்றுலா வழிகாட்டிகளுக்கு முறையான அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றார்.

இது குறித்து நகர்மன்றத் தலைவர் கூறியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலிலுள்ள ஹோட்டல்களுக்கு வரி விதிப்பு செய்யப்பட்டதை எதிர்த்து 32 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரூ.1.88 கோடி வரி பாக்கி உள்ளது.

வரி வசூல் மூலமாகவே மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படுகிறது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் பகிரங்க முறையில்தான் ஏலம் விடப்பட்டன. அதனையும் எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளனர். இதனால் நகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதால், அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தையும், வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள காதி கிராப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தையும் பெற்று அதில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க வேண்டும்.

பள்ளங்கி கிராமம் வழியாக பழனிக்கு சாலை அமைக்க வேண்டும் என்றார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

கொடைக்கானல் நகரில் அனுமதியில்லாத காட்டேஜ்கள் மீது கடந்த ஆண்டு ரூ.1.25 கோடி வரை வசூல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹோட்டல்களில் இலைகளில் மட்டுமே உணவு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஹோட்டல் உரிமையாளர்கள் உதவி செய்ய வேண்டும். ஹோட்டல்களில் விலைப்பட்டியலை கட்டாயமாக வைக்க வேண்டும்.

ஹோட்டல் உரிமையாளர்களின் வரியை குறைப்பது குறித்து லோக் அதாலத் முறையில் பேச்சு வார்த்தை நடக்க முன் வரவேண்டும்.

பிரையண்ட் பூங்காவில் ரூ.1.25 கோடி செலவில் ரோஜா தோட்டம் அமைக்கப்படும். அண்ணா சிலையை சுற்றி இசை நடன நீரூற்று, லேசர் ஷோ, ஆட்டுப் பண்ணைப் பகுதியில் பாரா கிளைடிங், யானை சவாரி, வனத்திற்குள் நடைப் பயிற்சி, பேட்டரியால் இயங்கும் கார்கள், பறவைகள் சரணாலயம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன என்றார் ஆட்சியர். கூட்டத்தில் ஆர்.டி.. வீரபாண்டியன், வட்டாட்சியர் உதயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.