Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செங்கோட்டையில் புதிய கட்டடங்கள், பார்க் வசதி

Print PDF

தினமலர் 06.08.2010

செங்கோட்டையில் புதிய கட்டடங்கள், பார்க் வசதி

தென்காசி: செங்கோட்டையில் 1 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள், பார்க் திறப்பு விழா மற்றும் 50 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று (6ம் தேதி) நடக்கிறது.செங்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான முத்துசாமி பூங்கா உள்ளது. இப்பூங்காவை சீரமைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்ற வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து அரசு இப்பூங்காவை சீரமைக்க 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. சிறுவர், சிறுமியர் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் பூங்கா சீரமைக்கப்பட்டது. ஒட்டகசிவிங்கி, மான், புலி, அன்னப்பறவை போன்றவற்றின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செயற்கை நீருற்று, இரவில் ஜொலிக்கும் வண்ண மின் விளக்குகள், சிறுவர், சிறுமியர் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு போன்றவையும், பூங்காவை சுற்றி பார்க்க நடைபாதை மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் பகுதியில் புல்தரை அமைப்பதற்காக நகராட்சி நிர்வாகம் தனியாக 3 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பூங்காவை கடையநல்லூரில் இன்று (6ம் தேதி) நடக்கும் விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.செங்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் 1 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் மகப்பேறு வார்டு உள்ளிட்ட கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றையும் துணை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.இந்திய சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் நடுக்கல் உள்ளது. அவருக்கு மணி மண்டபம் கட்ட காமராஜர் முதல்வராக இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மணி மண்டபம் கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சட்டசபையில் பேசிய முதல்வர் கருணாநிதி வீரவாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.இதற்கான இடம் செங்கோட்டை நகராட்சி முத்துசாமி பூங்காவில் தேர்வு செய்யப்பட்டது. இங்கு 50 லட்சம் ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல்லை துணை முதல்வர் நாட்டுகிறார்.