Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துணை முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்

Print PDF

தினமணி 06.08.2010

துணை முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்

திருநெல்வேலி, ஆக. 5: திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தமது சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் துணை முதல்வர் மு.. ஸ்டாலின் இரண்டு அரசு விழாக்களில் பங்கேற்கிறார்.

இந்த விழாக்களில் அவர் திறந்து வைக்கும் பணிகள், அடிக்கல் நாட்டும் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளின் மொத்த மதிப்பு ரூ. 184 கோடி ஆகும்.

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வண்ணார்பேட்டையில் ரூ.14 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை துணை முதல்வர் திறந்து வைக்கிறார்.

பின்னர், வீரவநல்லூரில் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் கட்டியுள்ள "மயோபதி' தசைத்திறன் மாறுபாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார்.

காலை 10 மணிக்கு அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை மேம்பாலம், மணிமுத்தாறு, விக்கிரமசிங்கபுரம் குடிநீர்த் திட்டம் உள்பட ரூ. 47.89 கோடி மதிப்புள்ள 354 திட்டப் பணிகளைத் திறந்துவைக்கிறார். பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில் ரூ.25 கோடியில் மேம்பாலம் உள்பட ரூ. 55.50 கோடி மதிப்புள்ள 40 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், 2,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி உள்பட ரூ.18.98 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 34,087 பேருக்கு துணை முதல்வர் வழங்குகிறார்.

மாலை 4.30 மணிக்கு கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், ரூ. 39.22 கோடி மதிப்புள்ள 73 பணிகளுக்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். தென்காசி, செங்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.20.66 கோடி மதிப்பிலான 66 திட்டப் பணிகளைத் திறந்துவைக்கிறார். 1,654 பேருக்கு ரூ.90 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வர் வழங்குகிறார்.

சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான சனிக்கிழமை காலை 10 மணிக்கு சங்கரன்கோவில் களப்பாகுளத்தில் நடைபெறும் விழாவில், அரியநாயகிபுரத்தில் ரூ.2.55 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இம் மாவட்டத்தின் 8-வது சமத்துவபுரத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையையும் துணை முதல்வர் திறந்துவைக்கிறார். இங்கு மொத்தம் ரூ.10.24 லட்சம் மதிப்பிலான 27 திட்டப் பணிகளைத் திறந்துவைக்கிறார். மேலும் ரூ. 2.95 கோடி மதிப்புள்ள 10 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 4,420 பேருக்கு ரூ.5.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார்.

பட்டமளிப்பு விழா: சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார் துணை முதல்வர். அங்கு ரூ. 47 கோடி செலவில் கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.