Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர மேம்பாட்டு நடவடிக்கை குழு கூட்டம் சிதம்பரத்தில் பூந்தொட்டிகள் அமைக்க முடிவு ஆட்சியர் சீத்தாராமன் தகவல்

Print PDF

தினகரன் 10.08.2010

நகர மேம்பாட்டு நடவடிக்கை குழு கூட்டம் சிதம்பரத்தில் பூந்தொட்டிகள் அமைக்க முடிவு ஆட்சியர் சீத்தாராமன் தகவல்

சிதம்பரம், ஆக. 10: சிதம்பரம் நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சிதம்பரம் நகர மேம்பாட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இதன்படி முதல் கட்டமாக நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நகர மேம்பாட்டு நடவடிக்கை குழுவின் இரண்டாவது கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார். சிதம்பரம் கோட்டாட்சியர் ராமராஜூ வரவேற்றார்.

இதில் எஸ்பி அஸ்வின்கோட்னீஷ், திட்ட அலுவ லர் ராஜஸ்ரீ, சிதம்பரம் தாசில்தார் காமராஜ், டிஎஸ்பி மூவேந்தன், நடராஜர் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், நகராட்சி ஆணையாளர் மாரியப்பன்(பொ), நகர் மன்றத் தலைவர் பௌஜியாபேகம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பள்ளிப்படை தனலட்சுமிரவி, சி.கொத்தங்குடி வேணுகோபால், நான்முனிசிபல் ராஜேந்திரன் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:

சிதம்பரம் நகர மேம் பாட்டு நடவடிக்கை குழுவின் கூட்டம் நடந்தது. சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையே மேற்கொள்ளும். 15 மீட்டர் உயரத்தில், ரூ 28 லட்சம் செலவில் 33 விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதி மூலம், அண்ணாமலைநகர் பேரூராட்சியில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படும். நகரின் நான்கு முக்கிய வீதிகளும் அழகு படுத்தப்படும். நடைபாதைகளில் 20 அடிக்கு ஒரு இடத்தில் பூந்தொட்டிகளும், முக்கிய இடங்களில் கண்ணை கவரும் வகையில் அழகிய குப்பை தொட்டிகளும் அமைக்கப்படும்.

நகரில் உள்ள கட்டண கழிவறைகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் சிதம்பரம் நகருக்கு வந்தால், இங்கேயே தங்க வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு நகரம் அழகு படுத்தப்படும். நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதலாக 5 போக்குவரத்து போலீசாரும், ரெக்கவரி வாகனமும் வழங்க எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார். கஞ்சிதொட்டிமுனை பகுதியில் அழகிய கலர் நீரூற்று அமைக்கப்படும். மேலும் அங்கு பஸ் நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.