Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விரிவடைகிறது மதுரை மாநகராட்சி எல்லை

Print PDF

தினமணி 13.08.2010

விரிவடைகிறது மதுரை மாநகராட்சி எல்லை

மதுரை, ஆக.12: பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மதுரை மாநகராட்சியின் எல்லை விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. எல்லை விரிவாக்கம் செய்யப்படும்போது மாநகரில் தற்போது உள்ள 4 மண்டலங்களை 20 மண்டலங்களாகப் பிரிக்க வாய்ப்புள்ளது.

நகராட்சியாக இருந்த மதுரை, 1971}ம் ஆண்டு மாநகராட்சியானது. அப்போது, மாடக்குளம், விராட்டிபத்து உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதன்படி மதுரை மாநகராட்சியின் எல்லை தற்போது 51.82 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில், 72 வார்டுகளும் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது மாநகராட்சிப் பகுதி மக்கள்தொகை சுமார் 11 லட்சம்.

2000-ம் ஆண்டில் தீர்மானம்: இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்தவேண்டும் என பல ஆண்டுகள் கோரிக்கையின் அடிப்படையில், கடந்த 2000-வது ஆண்டில் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில், திருமங்கலம், திருப்பரங்குன்றம், நாமலைபுதுக்கோட்டை, உத்தங்குடி, கண்ணனேந்தல், திருப்பாலை, ஆனையூர், ஹார்விபட்டி, திருநகர், அவனியாபுரம், ஒத்தக்கடை, சமயநல்லூர், காதக்கிணறு, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி போன்ற மாநகராட்சியின் எல்லை மதுரை மாநகராட்சியைவிட அதிகம் என்பதால், இதுபோன்ற விரிவாக்கம் மதுரைக்கும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் விரிவாக்கப் பகுதியில் உள்ள கிராமங்களை இணைப்பதன் மூலம் சுமார் 170 சதுர கிலோ மீட்டர் வரை மதுரை மாநகராட்சி எல்லை விரிவடையும் என நகரமைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விரிவாக்கம் அவசியம்: தற்போது மக்கள்தொகைக்கு ஏற்ப எல்லையை விரிவுபடுத்தவும், வளர்ச்சித் திட்டங்களை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதுபோன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால்தான் எதிர்காலத்தில் வாகனங்கள் எண்ணிக்கை மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்க முடியும்.

மேலும், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் | 2,360 கோடி மதிப்பிலான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மாநகரத்தையொட்டியுள்ள நகர்களுக்கான ஒருங்கிணைந்த நகர் வளர்ச்சித் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படவுள்ளன. இதுபோன்ற பெரிய திட்டங்கள் மாநகராட்சி எல்லைக்கு வெளியே உள்ளன. மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் மூலம் இதுபோன்ற பகுதிகள் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் வரும்போது மேம்பாட்டுத் திட்டங்களை அதிக நிதி ஒதுக்கீடு செய்து மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

நகர்மயமாதல்: மேலும், மாநகராட்சியை ஒட்டி பல கிராமங்கள் உள்ளன. இதன் எல்லை விரிவடைந்தால் அந்த கிராமங்களுக்கும் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தங்குதடையின்றி கிடைக்க வாய்ப்புள்ளது. கிராமங்களும் நகர்மயமாவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

எல்லை அதிகரிப்பு காரணமாக வளர்ச்சிப் பணிகளுக்காக மாநில, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, சுற்றுலாத் துறை சார்பில் அளிக்கப்படும் நிதியுதவி உள்ளிட்டவை

அதிகரிக்கும். சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் மாநகராட்சிக்கும் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

100 வார்டுகள் கூடுதலாக வாய்ப்பு: மாநகராட்சி எல்லைக்குள் தற்போது 72 வார்டுகள் உள்ளன. எல்லை விரிவாக்கத்தால் கூடுதலாக 100 வார்டுகள் உதயமாக வாய்ப்புள்ளது. இதனால், மாநகராட்சியில் கூடுதல் பணியாளர்கள், அதிகாரிகளை நியமிக்க வேண்டிய சூழ்நிலையில் வேலைவாய்ப்பும் கிடைக்க வழியேற்படும்.

ஆலோசனைக் கூட்டம்: இந்நிலையில், சென்னையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் செயலர் அசோக் வரதன் செட்டி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, மதுரை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். இதனால், எல்லை விரிவாக்கத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்ப்பதாக மாநதகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.