Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பூங்காக்களை மேம்படுத்த ஆட்சியர் யோசனை

Print PDF

தினமணி 20.08.2010

பூங்காக்களை மேம்படுத்த ஆட்சியர் யோசனை

புதுக்கோட்டை, ஆக. 19: புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள பூங்காக்களை பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய "நமக்கு நாமே திட்ட'த்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளலாம் என யோசனை தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் ஆ. சுகந்தி.

புதுக்கோட்டை புதுக்குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நடைப் பயிற்சியாளர் சங்க தொடக்க விழாவில், பங்கேற்ற அவர்,சங்கத்தைத் தொடக்கிவைத்து மேலும் அவர் பேசியது:

""இந்த புதுக்குளக்கரையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைப்பயிற்சிக்கு தடை விதித்துள்ள மறு பரிசீலனை செய்யவேண்டுமென இங்கு குறிப்பிட்டனர். அரசு அலுவலக வளாகத்தை தேவையற்ற பயன்பாட்டுக்குவிடக் கூடாது என்பது விதி.

மேலும் பல முறை அங்கு செல்லும்போதும் நான் பார்த்த விரும்பத் தகாத காட்சிகளும் பாரம்பரியமிக்க அவ்வளாகம் மற்றும் அங்குள்ள உயிரினங்கள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கமுமே இந்தத் தடைக்கு காரணமாகும்.

அதே நேரத்தில், புதுக்கோட்டை நகரில் உள்ள பூங்காக்களைப் பராமரிக்கும் நடவடிக்கைகளில் நகராட்சி நிர்வாகத்தை ஈடுபடச் செய்ய வேண்டும் என்ற மறைமுக நோக்கமும் உண்டு.

சமூகப் பொறுப்பும் அக்கறையும் பொதுமக்களிடம் அதிகரிக்கும்போதுதான் எந்த முயற்சியும் வெற்றி பெறும். நகரில் உள்ள பூங்காக்களைப் பராமரிக்க இதுபோன்ற சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் பங்களிப்புடன் கூடிய "நமக்கு நாமே திட்ட'த்தின் மூலம் பூங்காக்களை மேம்படுத்த முன்வந்தால் அதற்கு உதவ மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது'' என்றார் மாவட்ட ஆட்சியர் ஆ. சுகந்தி.

தொடர்ந்து, 1, 000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியர் தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்கு, நகர்மன்றத் துணைத் தலைவரும் நடைப் பயிற்சியாளர் சங்கத் தலைவருமான க. நைனாமுஹம்மது தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் உ. ராமதிலகம் முன்னிலை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி, நகராட்சி ஆணையர் கே. பாலகிருஷ்ணன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சு. எழிலரசன், நகராட்சிப் பொறியாளர் கே. ரெங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். சங்கத்தின் கெüரவ ஆலோசகர் தங்கம் மூர்த்தி வாழ்த்திப் பேசினார்.

முன்னதாக, சங்கச் செயலர் சு. தனவேலு வரவேற்றார். துணைத் தலைவர் சோ. பார்த்திபன் திட்ட அறிக்கை வாசித்தார். சங்கப் பொருளர் கி. ஸ்ரீதரன் நன்றி கூறினார்.