Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வடலூர் நகரை அழகுபடுத்தும் பணி துவக்கம் திட்ட மதிப்பீடு தயாரிப்பு

Print PDF

தினகரன் 24.08.2010

வடலூர் நகரை அழகுபடுத்தும் பணி துவக்கம் திட்ட மதிப்பீடு தயாரிப்பு

நெய்வேலி, ஆக.24: வடலூர் நகரை அழகுபடுத்தும் பணி துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் வடலூர்வளர்ந்து வரும் நகராகும். இங்கு வள்ளலார் நிறுவிய சத்தியஞானசபை உலகப்புகழ்பெற்றது. இதை சுற்றுலாதலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. வள்ள லார் தெய்வநிலையத்திற்கு நாடுமுழுவதுமிருந்து தின சரி நூற்றுக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. அதேபோல் ஞான சபையை நெடுஞ்சாலையிலிருந்து பார்த்து ரசிக்கும் நிலை இல்லாமல் ஆக்கிரமிப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தது. நான்குமுனை சந்திப்பும் ஆக்கிரமிப்புகளால் சிக்கி திணறியது. இதனால் பல விபத்துகளும் ஏற்பட்டன. இதனை அறிந்த அமைச்சர் பன்னீர்செல்வம் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கேட்டுக்கொண்டார். அதனை அடுத்து ஆட்சியர் சீத்தாராமன், சிதம்பரம், விருத்தாசலம், போன்ற கோயில் நகரங்களுக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர் இணைந்து ஞானசபை, நான்குமுனை சாலை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பல இடங்களில் மக்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர்.

இந்த நிலையில் வடலூர் நகரை அழகுபடுத்தும் பணி நேற்று துவங்கியது. வடலூர் நான்கு முனை சந்திப்பிலிருந்து சென்னை&தஞ்சை, கடலூர்& விருத்தாசலம் சாலையும் அகலப்படுத்தப்பட்டன. புதிய தரமான தார்சாலைகள் போடப்படுகின்றன. இதை இருவழிப்பாதையாக மாற்ற சாலை நடுவே தடுப்பு வேலியும் அமைக்கப்படுகின்றது. நான்குமுனை சந்திப்பில் செயற்கை நீர் ஊற்று போன்றவற்றால் அழகுபடுத்தப்படுகின்றது. இதேபோல் ஞானசபை திடல் தெருவில் அழகிய மதிற்சுவர், பூங்காக்கள் அமைக்கப்படுகின் றன.

இந்த பணிகளுக்கான திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணி நேற்று வடலூரில் துவங்கியது. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தாமரைச்செல்வன், உதவிபொறியாளர் மலர்விழி, சாலை ஆய்வாளர் செல்வராஜ், ஆகியோர் இந்த பணிகளை மேற்கொண்டனர். இந்த பணிகள் துவங்கியதின் மூலம் பொதுமக்களின் கோரிக்கை செயல்வடிவம் பெறுகின்றது. இந்த திட்டம் முழுமை பெறும்போது வடலூர் நகரம் பெருநகர வரிசையில் இடம்பெறும்.

ஞானசபை வளாகத்தில் என்எல்சி உதவியுடன் புல்தரை, பூங்கா, நீர் ஊற்று போன்றவை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் வள்ளலார் கொள்கைகள் தொடர்புடைய பொதுநூலகம் அமைக்கவும், ஞானசபையை முழுமையான தியான கூடமாக மாற்றவும் சன்மார்க்க அன்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

இந்த பணிகள் நிறைவு பெற்றால் வடலூர் சுற்றுலா தலமாக தரம் உயர்ந்து உலக அளவில் புகழ் பெறும் என பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். இதற்கான பணிகளும் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மேற்பார்வையில் செயல்பட உள்ளது. இதனை அடுத்து வடலூர் புனித நகராகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.