Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில்ரூ. 85 லட்சத்தில் பூங்கா பணி தொடக்கம்

Print PDF

தினமணி 26.08.2010

அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில்ரூ. 85 லட்சத்தில் பூங்கா பணி தொடக்கம்

சென்னை, ஆக. 21: சென்னை அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் ரூ.85 லட்சத்தில் மருத்துவ தாவரங்களுடன் கூடிய புதிய பூங்கா அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

÷கோட்டூர்புரத்தில் அடையாறு ஆற்றின் ஓரத்தில் 3.84 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 85.87 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணியை மேயர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசியது:

÷அடையாறு ஆற்றின் ஓரம் 3.84 ஏக்கர் நிலம் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமாக இருந்தது. இந்த இடத்தை சிலர் குடிசைகள் போட்டு ஆக்கிரமித்திருந்தனர். இதனால், இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வந்தது.

÷மேலும், அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அங்கிருந்த குடிசைப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பொதுப் பணித்துறை வசம் இருந்த இந்த இடம், மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

÷இந்த இடத்தில் ஏற்கெனவே பொதுப் பணித்துறை மூலம் நிழல் தன்னார்வ தொண்டு நிறுவனம் 240 வகையான மருத்துவ குணம் கொண்ட செடிகளை நட்டு பராமரித்து வருகிறது.

÷இந்த அரிய வகை மருத்துவச் செடிகளுடன் புதிய பூங்காவை ரூ. 85.87 லட்சம் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூங்காவில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு, நடைபாதை அமைக்கப்படும்.

÷அழகிய புல் தரைகள், பார்வையாளர்கள் அமருவதற்கென மண்டபம், பொது சுகாதார வளாகம், 50 அமரும் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். 10 மாதத்தில் பூங்கா அமைக்கும் பணி முடிக்கப்படும் என்றார் மேயர் மா. சுப்பிரமணியன். துணை மேயர் ஆர். சத்யபாமா, எதிர்க் கட்சித் தலைவர் சைதை ரவி, உறுப்பினர் மேரி லூர்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.