Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர் மேம்பாட்டு திட்டம் ரூ1000 கோடிக்கு எதிர்பார்ப்பு

Print PDF

தினகரன் 30.08.2010

நகர் மேம்பாட்டு திட்டம் ரூ1000 கோடிக்கு எதிர்பார்ப்பு

கோவை, ஆக. 30: கோவை மாநகராட்சியின் நகர் மேம்பாட்டு திட்ட பணிகளுக்காக கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாநகராட்சியில் 3186 கோடி ரூபாய்க்கு திட்ட பணிகள் துவங்கி நடக்கிறது. ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் துவங்கிய இந்த பணிகள், 5வது ஆண்டை எட்டிவிட்டது. ஆனாலும் திட்ட பணிகள் முழுமையாக முடியவில்லை. நகரில் 8 குளங்களை மேம்படுத்துதல், 24 மணி நேர குடிநீர் சப்ளை திட்டம், அடுக்குமாடி கார் பார்க்கிங் திட்டங்கள் இன்னும் துவக்கப்படவில்லை. மிக பிரமாண்டமான, நகரின் ஒட்டு மொத்த கட்டமைப்பையே மாற்றும் வகையிலான போக்குவரத்து மேம்பாட்டு திட்ட பணி துவக்க மாநகராட்சி இன்னும் ஆயத்தமாகவில்லை. போக்குவரத்து மேம்பாட்டிற்கு 1,149 கோடி ரூபாய்க்கு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்டுள்ளது. சாலை அகலப்படுத்த 234 கோடி ரூபாய், 92.50 கோடி ரூபாய்க்கு சாலை கீழ் மற்றும் மேல் மட்ட மேம்பாலங்கள், 26.50 கோடி ரூபாய்க்கு சுரங்க நடைபாதை, 211 கோடி ரூபாய்க்கு ரயில்வே மேம்பாலங்கள், 585 கோடி ரூபாய்க்கு இணைப்பு சாலைகள், 57 கோடி ரூபாய்க்கு சாலை தர மேம்பாடு, 21 கோடி ரூபாய்க்கு இருசக்கர வாகன டிராக், நடைபாதை, 30 கோடி ரூபாய்க்கு போக்குவரத்து மேலாண்மை, 383 கோடி ரூபாய்க்கு பஸ் ரோடு டிரான்ஸ்போர்ட் சிஸ்டம், 478 கோடி ரூபாய்க்கு ரிங் ரோடு, 65 கோடி ரூபாய்க்கு பஸ் டெர்மினல், 36 கோடி ரூபாய்க்கு டிராக் டெர்மினல், 200 கோடி ரூபாய்க்கு வாகன நிறுத்துமிடம் என திட்டம் தயாரிக்கப்பட்டது.

சாலை மேம்பாட்டுக்கான இத்திட்டத்தில் ஸ்கை பஸ், மோனோ பஸ், எக்ஸ்பிரஸ் பாதை என பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மிக பெரிய தொகையில் அமைந்துள்ள இந்த திட்டத்தின் ஆரம்ப கட்ட ஆயத்த வேலைகள் துவக்கப்படவில்லை. மாநகராட்சி, நெடுஞ்சாலை துறைகள் சார்பில் நடக்கும் இதர சாலை பணிகள் மட்டுமே நடக்கிறது. நகர் மேம்பாட்டு திட்டத்தின், கனவு சாலைகள் இன்னும் பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை. குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடக்கும் நிலையில், சாலை பணிகளை படிப்படியாக துவங்கினால் தான், அனைத்து பிரதான, குறுக்கு சாலைகளையும் சீரமைக்க முடியும். மேம்பாலம், நடைபாதை, ரிங் ரோடு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும். ஆனால், மாநகராட்சியின் நிதி சுமையால், அதிக தொகையிலான திட்டங்கள் தாமதமாகி வருவதாக தெரிகிறது. புதிய திட்டங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும். இந்த தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. நகர் மேம்பாட்டு திட்ட அதிகாரிகள் கூறுகையில், " கூடுதல் தொகை எதுவும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகார பூர்வ உத்தரவு கிடைக்கவில்லை, " என்றனர்.