Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை பஸ் நிலையம், பூ மார்க்கெட் இடையே தென் மாவட்டத்தில் பெரிய சென்ட்ரல் மார்க்கெட் மத்திய அரசு ரூ. 85 கோடி அனுமதி

Print PDF

தினகரன் 07.09.2010

மதுரை பஸ் நிலையம், பூ மார்க்கெட் இடையே தென் மாவட்டத்தில் பெரிய சென்ட்ரல் மார்க்கெட் மத்திய அரசு ரூ. 85 கோடி அனுமதி

மதுரை, செப். 7: மதுரை மாட்டுத் தாவணி பஸ் நிலையம், பூ மார்க்கெட் இடையே 27 ஏக்கரில் நிரந்தரமாக சென்ட்ரல் மார்க் கெட் கட்ட மத்திய அரசு ரூ. 85 கோடி அனுமதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தென் மாவட்டத்தில் பெரிய சென்னட்ரல் மார்க்கெட்டாக அமையும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் இருந்த சென்ட்ரல் மார்க்கெட், மாட்டுத் தாவணிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. கோயில் அருகில் நெருக்கடியை தவிர்க்கும் நோக்குடன் இந்த மார்க்கெட் உருவாக்கப்பட்டது. நிரந்தரமாக சென்ட்ரல் மார்க்கெட் கட்டுவதற்கு, மாட்டுத் தாவணி பஸ் நிலையத்திற்கும், பூ மார்க்கெட்டுக்கும் இடையே காலியாக உள்ள 27 ஏக்கர் நிலத்தை ஏற்கனவே மாநகராட்சி ஒதுக்கி உள்ளது. இதற்கு ரூ. 85 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

மாநகராட்சியில் இதற்கு போதிய நிதிவசதி இல்லாததால், தமிழ்நாடு வேளாண்மை பொருட்கள் விற்பனை வாரியம் பொறுப்பில் 33 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் இங்கு மார்க்கெட் கட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் நிரந்தர மார்க்கெட் கட்ட வேளாண் விற்பனை வாரியம் மத்திய அரசின் வேளாண்மை துறையில் நிதி கோரியது. இதற்கு மத்திய அரசு ரூ. 85 கோடி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த நிதி ஆண்டில் ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கட்டுமான பணி தொடங்கி நடைபெற்ற பிறகு படிப்படியாக ரூ. 55 கோடி நிதி ஒதுக்கீடு ஆகும். இங்கு காய்கறிகள் உலராமல் இருப்பு வைக்கும் குளிர்சாதன குடோன், பெரிய, சிறிய அளவில் 1,300 கடைகள் அமைகின்றன. மார்க்கெட் வருவாயில் 85 சதவீதம் மாநகராட்சிக்கும், 15 சதவீதம் வாரியத்திற்கும், 5 சதவீதம் பராமரிப்புக்கும் ஒதுக்கப்படும் எனவும், 33 ஆண்டுக்கு பிறகு மாநகராட்சியிடம் இதை வாரியம் ஒப்படைப்பது எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது தென் மாவட்டங்களில் பெரிய மார்க்கெட்டாக அமையும்.

மார்க்கெட் கட்ட இப்போது தான் நிதி ஒதுக்கீடு ஆகி உள்ளது. இதை கட்டி முடிக்க சில ஆண்டுகள் ஆகும். அதுவரை சென்ட்ரல் மார்க்கெட் மாட்டுத் தாவணியில் தற்போதுள்ள இடத்தில் இயங்கும். நிரந்தர மார்க்கெட் கட்டி முடித்ததும் அங்கு மாற்றம் செய்யப்படும்.