Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஓசூர் நகராட்சியுடன் 9 பஞ்., இணைப்பு : கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

Print PDF

தினமலர் 14.09.2010

ஓசூர் நகராட்சியுடன் 9 பஞ்., இணைப்பு : கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

ஓசூர்: ஓசூர் நகராட்சியுடன் ஒன்பது பஞ்சாயத்துகளை சேர்க்க கவுன்சில் கூட்டத்தில் அனைத்து கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓசூர் நகராட்சியுடன் புற நகர் பஞ்சாயத்துகளை இணைக்கும் அவசர கூட்டம் நகராட்சி தலைவர் சத்யா தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொ) இளங்கோவன், துணை தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: நகராட்சி தலைவர் சத்யா (தி.மு..,): ஓசூர் நகரம் 1969ம் ஆண்டு நகர பஞ்சாயத்தாக உருவாக்கப்பட்டு, 1998ம் ஆண்டு நகராட்சியாக தரம்உயர்த்தப்பட்டது. தற்போது நகரம் தொழில் ரீதியாக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதால் நகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக புறநகர் பகுதியில் தொழிற்சாலைகள் நிறைந்த மூக்கொண்டப்பள்ளி, ஜுஜுவாடி, சென்னத்தூர், ஆவலப்பள்ளி, மத்திகிரி டவுன் ஆகிய பஞ்சாயத்துகளை நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.

ஜெயபிரகாஷ் (பா...,): நகராட்சியுடன் பஞ்சாயத்துகளை இணைத்தால் சுற்று வட்டார கிராமங்கள் வளர்ச்சி பெறும். நகருக்கு கிடைக்க வேண்டிய மானிய உதவிகள், அரசு திட்டங்கள் உள்ளிட்டவை அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஸ்சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, குடிநீர் திட்டம் ஆகியவை உடனடியாக கிடைக்க வாய்ப்புள்ளது. இது நல்லதொரு நடவடிக்கை. பா..., சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். லோகநாதன் (.தி.மு..,): கடந்த 2001ம் ஆண்டு நகராட்சியுடன் பஞ்சாயத்துகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். தவமணி (.தி.மு..,): பஞ்சாயத்துகளை நகராட்சியுடன் இணைப்பது மூலம் பஞ்சாயத்து கிராமங்களில் வரிஎதுவும் உயர்த்தப்படுமா? என்பதை தெளிவு படுத்த வேண்டும். கமிஷனர் இளங்கோவன்: எல்லையை விரிவுப்படுத்துவதால் பஞ்சாயத்துகளில் வரி உயர்த்தப்படாது. வரிசீராய்வு செய்வது கவுன்சிலர்கள் முடிவுதான். தற்போது நகராட்சியுடன் பஞ்சாயத்துகளை இணைத்தாலும், அடுத்த உள்ளாட்சி தேர்தல் வரை பஞ்சாயத்து நிர்வாகம் பஞ்சாயத்து தலைவர்கள் அதிகாரத்தின் கீழ் செயல்படும். துணை தலைவர் மாதேஸ்வரன் (தி.மு..,): தற்போது இணைக்கப்படும் பஞ்சாயத்துகளுடன் தொழிற்சாலைகள் நிறைந்த மேலும் சில பஞ்சாயத்துகளை சேர்க்க வேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள கிராமங்களும் நகருடன் சேர்ந்து வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது.

சத்யா: அதிக வருவாய் கிடைக்கும் ஒன்னல்வாடி, பேரண்டப்பள்ளி, பேகேப்பள்ளி, தொரப்பள்ளி ஆகிய பஞ்சாய்ததுகளையும் நகராட்சியுடன் இணைக்க தீர்மானத்தில் சேர்க்கப்படும்.

பிரகாஷ் (காங்.,): பஞ்சாயத்துகளை நகராட்சியுடன் இணைப்பதால் ஏற்படும் வசதிகள், பயன் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கமிஷனர் இளங்கோவன்: பொதுவாக அனைத்து அரசு திட்டங்களும் 40 ஆண்டு மக்கள் தொகை, பரப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்போது பஞ்சாயத்துகளை இணைப்பதால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட நகருக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் கூடுதலாக பெற்று தர முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது. கிராம பஞ்சாயத்துக்களை நகராட்சியுடன் இணைக்கப்படுவதன் மூலம் மாநகராட்சியாக மாற்றுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியிருப்பது மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.