Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் நகராட்சியை மாநகராட்சியாக்க தீர்மானம்

Print PDF

தினமணி 14.09.2010

கரூர் நகராட்சியை மாநகராட்சியாக்க தீர்மானம்

கரூர், செப்.13: கரூர் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும் என கரூர் நகர்மன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூர் நகராட்சியின் அவசரக் கூட்டம் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் பெ. சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி. கனகராஜ், ஆணையர் ஆர். உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் நிலை உயர்த்துதல் தொடர்பாக கரூர் நகராட்சியை இனாம்கரூர், தாந்தோன்றிமலை நகராட்சிகள், சணப்பிரட்டி ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக மாற்றுவது தொடர்பாக ஊராட்சி துறையிடமிருந்து வரப்பட்ட ஆணை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்துவதற்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கரூர் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்து வதற்கு நடவடிக்கை எடுத்த முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தலைவர் கொண்டு வந்த தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் வை. நெடுஞ்செழியன், பி. முத்துசாமி,எஸ். கமலா, எஸ். வளர்மதி, பி. பரமசிவம் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்தத் திட்டம் நிறைவேற சட்டப்பேரவையில் கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி பலமுறை பேசியுள்ளார் என்றனர். இதற்கு திமுக உறுப்பினர்கள் இரா. பிரபு, என். மணிராஜ், ஆண்டாள்பாலகுரு, வே. கதிரவன் உள்ளிட்ட உறுப்பினர்கள், சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு என்றாவது செந்தில்பாலாஜி சென்றதுண்டா என்று கேள்வியெழுப்பினர்.

எந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதை திமுகவினர நிரூபிக்கத் தயாரா என்று அதிமுகவினர் கேட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது. அப்போது தலைவர், நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதென்றால் வெளிநடப்பு செய்வதை விட்டுவிட்டு ஏன் கூச்சலில் ஈடுபட வேண்டும். கூட்டத்தில் பொதுமக்களின் பிரச்னை குறித்து மட்டுமே பேசவேண்டும். எனவே, உறுப்பினர்கள் அனைவரும் அவரவர்கள் இருக்கையில் அமரவேண்டும் என்றார்.

இருந்தும் கூச்சல் நிற்கவில்லை. அப்போது, உறுப்பினர் எஸ். கமலா தலைவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சபை அமைதியானது. சபையின் முன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுகவினர் வலியுறுத்தினர். எங்களின் பிரச்னையைத்தான் தலைவரிடம் கூறினோம் என்றனர் அதிமுகவினர். இதைத் தொடர்ந்தும் அதிமுக-திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்க வேண்டும் என்றார் திமுக உறுப்பினர் என். மணிராஜ். அதற்கு ஆணையர் ஆர். உமாபதி, 25.10.2011-க்குப் பின்னரே மாநகராட்சியாகத் தரம் உயரும். அப்போது மேயராக வருபவர்தான் அந்தத் திட்டம் குறித்து முடிவு செய்வார். தரம் உயர்த்தப்பட்டால், மத்திய அரசு நிதி அதிகளவில் கிடைக்கும். அப்போது, தரம் உயர்த்தப்படுவதால் கட்டண உயர்வு ஏற்பட்டால் அதிமுக போராடும் என்றார் அதிமுக உறுப்பினர் பி. முத்துசாமி.