Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பூர் மாநகராட்சியுடன் இணைகிறது திருமுருகன்பூண்டி!

Print PDF

தினமணி 15.09.2010

திருப்பூர் மாநகராட்சியுடன் இணைகிறது திருமுருகன்பூண்டி!

திருப்பூர், செப்.14: திருப்பூர் மாநகராட்சியுடன் திருமுருகன்பூண்டி பேரூராட்சியை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒப்புதல் தெரிவித்தனர்.

எல்லை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரம்

நகராட்சி அந்தஸ்தில் இருந்த திருப்பூர் 2008 ஜனவரி 1-ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, நகராட்சிக்குரிய 52 வார்டுகள் மட்டுமே மாநகராட்சி அந்தஸ்தில் செயல்பட்டு வருகின்றன. முழுமையாக மாநகராட்சி நிலைக்கு உயர்த்த அருகிலுள்ள 15வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள், செட்டிபாளையம், மண்ணரை, தொட்டிபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், நெருப்பெரிச்சல், முத்தணம்பாளையம் ஊராட்சிகளையும் திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க அரசு உத்தரவிட்டது.

மேலும், இப்பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் பிச்சை, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு மாநகராட்சி எல்லைகளை விரிவுபடுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாநகராட்சி எல்லையை மேலும் விரிவுபடுத்த அதற்கான கருத்துகளை அனுப்புமாறு நகராட்சி நிர்வாக இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் திட்டம்

அதனடிப்படையில், தற்போதுள்ள திருப்பூர் மாநகராட்சிக்கு அடுத்த 15வேலம்பாளையம் நகராட்சியையொட்டியுள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சியை, திருப்பூர் மாநகராட்சி எல்லையுடன் சேர்க்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியுடன் 15வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள், செட்டிபாளையம், மண்ணரை, தொட்டிபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், நெருப்பெரிச்சல், முத்தணம்பாளையம் ஊராட்சிகள் மற்றும் திருமுருகன்பூண்டி பேரூராட்சி ஆகியன இணைக்கப்படும்போது மாநகராட்சியின் பரப்பு 174.11 சதுர கி.மீ ஆக விரிவு பெறும். மேலும், மாநகராட்சியின் ஆண்டு வருவாய் | 80.24 கோடியாகவும் உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றம்

விரிவுபடுத்தப்பட உள்ள திருப்பூர் மாநகராட்சியுடன் திருமுருகன்பூண்டி பேரூராட்சியையும் இணைக்க அரசுக்கு கருத்துரு அனுப்புவதற்கான தீர்மானம், மேயர் க.செல்வராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் மன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்ததை அடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, இக்கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு திருப்பூர் மாநகராட்சி எல்லையுடன் திருமுருகன்பூண்டி பேரூராட்சியை இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. துணை மேயர் கே.செந்தில்குமார், ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.