Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாளை. மாநகராட்சி பூங்கா பராமரிக்கப்படுமா?

Print PDF

தினமலர் 27.09.2010

பாளை. மாநகராட்சி பூங்கா பராமரிக்கப்படுமா?

திருநெல்வேலி:பாளை. இங்கிலீஷ் சர்ச் தெருவில் புதர் மண்டி துர்நாற்றம் வீசும் பூங்காவை பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை மாநகராட்சியின் சார்பில் முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பாளை. இங்கிலீஷ் சர்ச் தெருவில் மாநகராட்சி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் சிறுவர்கள் பொழுது போக்குவதற்கான உபகரணங்களும் உள்ளன.

இந்த பூங்காவிற்கு பாளை பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விடுமுறை நாட்களில் சென்று பொழுதை கழித்து வந்தனர்.நாளடைவில் இந்த பூங்கா சரிவர பராமரிக்கப்படாததால் முட்புதர்களாக மாறியதோடு, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. மேலும் பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி சேதமடைந்துள்ளதால் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் பூங்காவை திறந்த வெளி கழிப்பிடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாற்றி வருகின்றனர். இதனால் பூங்கா சுகாதாரமற்று காணப்படுவதோடு, துர்நாற்றமும் வீசுவதால் சிறுவர்கள் பூங்காவிற்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.எனவே மாநகராட்சி நிர்வாகம் புதர்மண்டியுள்ள பூங்காவை புதுப்பிப்பதோடு, பழுதடைந்த உபகரணங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.