Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி எல்லையை விரிவுபடுத்த தீர்மானம்: நகராட்சியில் ஆதரவு; பேரூராட்சியில் எதிர்ப்பு

Print PDF
தினமலர்      29.09.2010

நகராட்சி எல்லையை விரிவுபடுத்த தீர்மானம்: நகராட்சியில் ஆதரவு; பேரூராட்சியில் எதிர்ப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகராட்சியை விரிவுபடுத்த நகராட்சியை சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளை, நகராட்சியோடு இணைக்க வேண்டும் என, காஞ்சிபுரம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகராட்சி 11.72 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் உட்பட, முக்கிய அலுவலகங்கள் நகராட்சியை அடுத்துள்ள தேனம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளன. காஞ்சிபுரம் நகரை அடுத்து ஓரிக்கை, தேனம்பாக்கம், நத்தப்பேட்டை, கோனேரிகுப்பம் ஊராட்சிகள், செவிலிமேடு பேரூராட்சி ஆகியவை அமைந்துள்ளன. இப்பகுதிகளில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன. புதிதாக உருவாகும் குடியிருப்புப் பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளன. எனவே, நகராட்சிப் பகுதியை விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. கடந்த 1999ம் ஆண்டு வெளியிடப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணையின்படி, உள்ளாட்சிகளின் தரம் உயர்த்துதல் மற்றும் எல்லைகளை மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, காஞ்சிபுரம் அருகே வளர்ச்சியடைந்திருந்த பெரியதோட்டம், அரப்பணஞ்சேரி, திருக்காலிமேடு உட்பட சில பகுதிகளை மட்டும் நகராட்சியோடு இணைக்க பரிசீலனை நடந்தது. இந்நிலையில், 2007ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அரசாணை எண் 131ன்படி மீண்டும் நகர்ப்புற உள்ளாட்சிகளின் தரம் உயர்த்துதல், தரம் இறக்குதல், எல்லைகளை மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக நெறிமுறைகள் வழங்கப்பட்டன. அதன்படி நகராட்சியோடு விஷ்ணுகாஞ்சி, செவிலிமேடு, கோனேரிகுப்பம், அரப்பணஞ்சேரி, பெரியதோட்டம் பகுதிகளை சேர்ப்பது என, 2007ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி, காஞ்சிபுரம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் மீது அரசாணை வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு ஆய்வுகளுக்கும், ஆலோசனைகளுக்கும் பின், தற்போது வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கள் தொகை மற்றும் நகரங்களை சுற்றியுள்ள உள்ளாட்சி நிறுவனங்கள் விரிவடைந்து நகரங்களாக வளர்ச்சி பெற்று வருவதை கருத்தில் கொண்டு, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கேற்பவும், நகராட்சியால் சுலபமாக நிர்வகிக்கக் கூடிய வகையிலும், இதர வழிமுறைகளை நிறைவு செய்யும் வகையிலும் அமைந்துள்ள செவிலிமேடு பேரூராட்சி, ஓரிக்கை, தேனம்பாக்கம், நத்தப்பேட்டை ஊராட்சியை, நகராட்சியோடு இணைத்து நகராட்சி எல்லையை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டது. இதன்படி, காஞ்சிபுரம் நகராட்சி எல்லை 36.14 சதுர கிலோ மீட்டராக விரிவடையும். மக்கள் தொகை 2010ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 999 ஆக அமையும். இதற்கு ஆதரவு தெரிவித்து காஞ்சிபுரம் நகராட்சியோடு செவிலிமேடு பேரூராட்சி, ஓரிக்கை, தேனம்பாக்கம், நத்தப்பேட்டை, கோனேரிகுப்பம் ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செவிலிமேடு பேரூராட்சித் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பேரூராட்சியை காஞ்சிபுரம் நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப உள்ளதாக பேரூராட்சித் தலைவர் ஏழுமலை தெரிவித்தார்.