Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவெறும்பூர் பேரூராட்சியை மாநகராட்சியுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு

Print PDF

தினமணி 14.10.2010

திருவெறும்பூர் பேரூராட்சியை மாநகராட்சியுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு

திருவெறும்பூர், அக். 13: திருவெறும்பூர் பேரூராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதன்கிழமை அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவெறும்பூர் பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவர் க. பன்னீர்செல்வம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.

எறும்பீஸ்வரர் மலைக்கோவில் கிரிவலப் பாதையை சிமென்ட் தளமாக மாற்றுதல், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை அமைத்தல், பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தெரு விளக்கு பராமரிப்புப் பணியாளர், ஓட்டுநர்கள், கணினிப் பணியாளர்களை நிரந்தரமாக்க அரசு நடவடிக்கை எடுக்க கோருகிறோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து, திருவெறும்பூர் பேரூராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வள்ளுவர் நகர், கக்கன் காலனி, செல்வபுரம், நொச்சிவயல் புதூர் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரியும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மின் வாரிய அலுவலகம், பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை வேறு இடங்களுக்கு மாற்றக் கூடாது என்று வலியுறுத்தியும், சிறப்பு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1, 15-வது வார்டுகளுக்கு சாலைப் பணிகள், மேம்பாலத்துக்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்தும், நொச்சிவயல் புதூர் செல்லும் வழியில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே கேட்டை இரவு நேரங்களில் மூடிவிடுவதைக் கண்டித்தும் அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக உறுப்பினர் எஸ். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் எஸ். ரவிக்குமார், எல். அன்பழகன், . மேரி, கே. ரமேஷ், எம். ஜெயபால், அஞ்சாம்பு உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், மதிமுக உறுப்பினர் கே. சேதுராமன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த வட்டாசியர் சாரதாருக்குமணி, உறுப்பினர்களின் கோரிக்கைகள் தொடர்பாக வருகிற 20-ம் தேதி திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சமரசம் செய்தார். இதையடுத்து, உள்ளிருப்புப் போராட்டத்தை உறுப்பினர்கள் விலக்கிக் கொண்டனர்.