Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி எல்லை விரிவாக்க அரசாணை: நவ.22 மாமன்றக் கூட்டத்தில் வைக்க முடிவு

Print PDF

தினமணி                20.11.2010

மாநகராட்சி எல்லை விரிவாக்க அரசாணை: நவ.22 மாமன்றக் கூட்டத்தில் வைக்க முடிவு

மதுரை, நவ. 19: மதுரை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்துக்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை திங்கள்கிழமை (நவ.22) நடைபெறும் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தகவலுக்காக வைக்கப்படவுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 4 மண்டலங்கள், 72 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை சுமார் 12 லட்சம். இந் நிலையில், மாநகராட்சியின் தற்போதைய எல்லைக்குள் (51.82 சதுர கிலோ மீட்டர்) அருகில் உள்ள சில பகுதிகளை இணைத்து, எல்லையை விரிவாக்க வேண்டும் என நீண்டநாள்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக மாமன்றக் கூட்டத்தில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடைசியாக 9.9.2010-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாநகராட்சி எல்லைக்குள் ஆனையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் ஆகிய 3 நகராட்சிகளும், ஹார்விபட்டி, திருநகர், விளாங்குடி ஆகிய 3 பேரூராட்சிகளும், மேலமடை, உத்தங்குடி, வண்டியூர், நாகனாகுளம், கண்ணனேந்தல், திருப்பாலை, ஐராவதநல்லூர், சின்னஅனுப்பானடி, சிந்தாமணி, புதுக்குளம், தியாகராஜர் காலனி ஆகிய 11 ஊராட்சிகளையும் இணைக்கப் பரிந்துரை செய்யப்பட்டது.

மாநகராட்சியின் தொடர் நடவடிக்கையால் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை அரசாணை (நிலை) (எண்: 220. நாள் 28.9.2010) பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி மாமன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. கவுன்சிலர்கள் கூட்டத்தில் வைக்கப்படும் தீர்மானங்களில் இந்த அரசாணையும் தகவலுக்கு வைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் தொகை அதிகரிக்கும்: அரசாணைப்படி மதுரை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டால் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் மக்கள் தொகை சுமார் 16 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் மக்கள் தொகை இடம்பெற வேண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி தற்போதுள்ள 72 வார்டுகள், 125-க்கும் மேற்பட்ட வார்டுகளாகவும், தற்போதுள்ள மண்டலங்கள் 18-க்கும் மேற்பட்ட மண்டலங்களாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.