Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.90.13 கோடி மதிப்பிலான பணிகள், திட்டம் : ஸ்டாலின் திறந்துவைத்தார்

Print PDF

தினமலர்              01.12.2010

ரூ.90.13 கோடி மதிப்பிலான பணிகள், திட்டம் : ஸ்டாலின் திறந்துவைத்தார்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மாம்பழத்துறையாறு உட்பட 90 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், மற்றும் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

குமரியில் பல்வேறு திட்டம், மற்றும் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். குமரி மாவட்டத்தில் 580 வீடுகள் கலைஞர் வீடுவழங்கும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இவற்றின் மதிப்பு 4.35 கோடி ஆகும். இதைப்போல் வில்லுக்குறி அருகே ரூ.20.97 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாம்பழத்துறையாறு அணை நீர்தேக்க திட்டத்தை அவர் துவக்கி வைத்தார்.

மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் மூலம் 79 கடலோர கிராமங்கள், 17 டவுன்பஞ்சாயத்து, மற்றும் 19 வழியோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் 28.02 கோடி ரூபாய் மதிப்பில் திறக்கப்பட்டது. குழித்துறையாறு கூட்டு குடிநீர் திட்டம், பைங்குளம் குடிநீர் திட்டம், முன்சிறை குடிநீர் திட்டம், மற்றும் புதுக்கடை குடிநீர் திட்டம் ஆகிய குடிநீர் திட்டங்களுக்கான சுத்திகரிப்பு நிலையம் 14 கோடி ரூபாய் மதிப்பிலும், 79 கடலோர கிராமங்களுக்கான கூட்டுகுடிநீர் திட்டத்தில் பயன்பெறும் 11 டவுன் பஞ்சாயத்துக்கள், மற்றும் 19 வழியோர கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் 4.98 கோடி ரூபாய் மதிப்பிலும், நெடுஞ்சாலைத்துறை மூலம் நீரோடி-இரையுமன்துறை சாலை, பேச்சிப்பாறை- கோதையாறு சாலையில் பாலம், சாந்தபுரம் சாலையில் பாலம் என்று 2.83 கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை திட்டப்பணிகளையும் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைப்போல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ராஜிவ் காந்தி சுனாமி புனரமைப்பு திட்டத்தில் கொல்லங்கோடு-நீரோடி திட்டப்பகுதியில் 1.43 கோடி ரூபாய் மதிப்பில் 48 மாற்றுக்குடியிருப்புகளையும் அவர் திறந்துவைத்தார்.இதைப்போல் திற்பரப்பு நீர்வீழ்ச்சி பூங்கா, பஸ் நிறுத்துமிடம், இடைக்கோடு பஞ்சாயத்து அலுவலக கட்டடம், ரீத்தாபுரம் டவுன் பஞ்சாயத்து கட்டட அலுவலகம், தென்தாமரைக்குளம் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை உட்பட மொத்தம் 90 கோடியே 13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை ஸ்டாலின் திறந்து வைத்தார்.அடிக்கல் நாட்டிய பணிகள்: ரூ.11.40 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பேச்சிப்பாறையில் பல்முனை பயிற்சிக்கூடம் கட்டுதல், கன்னியாகுமரி- பழையாறு ஆற்றின் குறுக்காக தேசிய நெடுஞ்சாலையில் பாலம், பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி விடுதி கட்டடம் கட்டுதல், 10 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல், 31 அரசு உயர்நிலை, நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் தலைமை ஆசிரியர் அறை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த அடிக்கல் நாட்டப்பட்டது.

மாம்பழத்தாற்று அணையால் 905 ஏக்கர் பலன்பெறும் : மாம்பழத்துறையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மாம்பழத்துறையாறு நீர்தேக்க அணையின் மொத்த கொள்ளளவு 44.54 மில்லியன் கனஅடி ஆகும். ரூ.20.97 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்நீர்தேக்கத்தால் 455.76 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். இதைப்போல் மீதமுள்ள உபரி நீரை பத்மனாபபுரம் புத்தனார் கால்வாய் மூலம் பயன்படுத்தி 450 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி செய்யப்படுகிறது. மொத்தத்தில் மாம்பழத்துறையாறு நீர்தேக்கத்தின் மூலம் 905.76 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.2007ம் ஆண்டு மே மாதம் துவக்கப்பட்ட திட்டம் முடிவுற்று நேற்று அணை திறக்கப்பட்டது. நீர்தேக்கத்தினால் 25 குளங்கள் பயன்பெறுகின்றன. வில்லுக்குறி, கல்குளம், கப்பியறை பகுதியை சுற்றியுள்ள கிராமங்கள் அணைநீரால் பயன்பெறும். நீர்தேக்கத்தின் மொத்த நீளம் 360 மீட்டர், 80 அடி வரை அணையின் கொள்ளளவு நீர்மட்டம் உள்ளது.