Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேளச்சேரி ஏரியில் அமைகிறது ரூ.7 கோடியில் படகு குழாம்: மேயர் தகவல்

Print PDF

தினமலர்              10.12.2010

வேளச்சேரி ஏரியில் அமைகிறது ரூ.7 கோடியில் படகு குழாம்: மேயர் தகவல்

வேளச்சேரி : வேளச்சேரி ஏரியை 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்து, படகு குழாம் அமைப்பது குறித்த ஆய்வுகளை மேயர் சுப்ரமணியன் நேற்று மேற்கொண்டார்.

சென்னை வேளச்சேரி ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரி, அழகு படுத்தி சீரமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுந்து வந்தது. சர்வே எண் 123/1 ல் அமைந்துள்ள, வேளச்சேரி ஏரியின் மொத்த பரப்பளவு 265.48 ஏக்கர். சென்னை புறநகரில் உள்ள மவுன்ட், ஆதம்பாக்கம், கிண்டி, மடுவாங்கரை, ராஜ்பவன், .டி.வளாகம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வரும், மழைநீர், இந்த ஏரியில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக, வேளச்சேரி ஏரியின் கரைகளை உடைத்து ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் வசமாக்கி வருகின்றனர். தற்போது, வேளச்சேரி ஏரி, மூன்றில் ஒரு பங்காக சுருங்கி 55 ஏக்கர் பரப்பளவு மட்டுமே காணப்படுகிறது. மேலும் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் ஏரி தூர்ந்துவிட்டது. இது குறித்து "தினமலர்' நாளிதழ் அவ்வப்போது படத்துடன் கூடிய செய்திகளை வெளியிட்டு வந்ததுஇந்நிலையில், ஏரியை சீரமைத்து அதில் படகு குழாம் அமைப்பது குறித்து, மேயர் சுப்பிரமணியம் தலைமையில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளுடன் வேளச்சேரி ஏரியில் ஆய்வுகளை மேற்கொண்ட சுப்ரமணியன் கூறியதாவது:

மொத்தம் 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட, இந்த ஏரியில் ஆறு ஏக்கர் பரப்பளவில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. மீதமுள்ள 49 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியினை சீரமைத்து அதில் படகு குழாம் அமைக்க, ரூ.7 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் ஐந்து கோடியும், மெட்ரோ வாட்டர் சார்பில், இரணடு கோடியும் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அழகிய வண்ண விளக்குகள், நாற்காலிகள், வாக்கிங் செல்பவர்களுக்கான நடை பாதை போன்ற பல்வேறு வசதிகளுடன் படகு குழாம் அமைக்கப்பட உள்ளது. இது மட்டுமின்றி, கூவம் நதி ஏரியில் கலக்காமல் இருக்கவும், அருகில் உள்ள ராம் நகர் மற்றும் அரசு குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியினை வந்து சேராமல் இருக்கவும், மாற்று வழிகள் திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வுகள் முடிந்த பின்னர் சீரமைப்பு பணிக்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு சுப்ரமணியன் கூறினார்.

இந்த முறையாவது ஏரிக்கு விடிவுகாலம் கிடைக்குமா? : ஒவ்வொரு ஆண்டும் வேளச்சேரி ஏரியினை பார்வையிடும், அதிகாரிகள் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஏரியினை சீரமைத்து தருவதாக கூறி வந்தனர். கடந்த ஆண்டில் கூட சுற்றுலாத் துறை சார்பில், ஏரியில் படகு குழாம் அமைப்பதாகக் கூறிச்சென்றனர். ஆனால், ஏதும் நடக்கவில்லை. இந்த முறையாவது அரசு சீரமைப்பு பணிகளை கிடப்பில் போடாமல் செயல்படுத்தினால் சென்னையின் மிகப் பெரிய ஏரியான வேளச்சேரி ஏரி காப்பாற்றப்படும்.