Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவைக்கு ரூ.543 கோடியில் புதிய திட்டங்கள் : வீடியோ கான்பரன்சில் முதல்வர் துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பங்கேற்பு

Print PDF

தினகரன்                 13.12.2010

கோவைக்கு ரூ.543 கோடியில் புதிய திட்டங்கள் : வீடியோ கான்பரன்சில் முதல்வர் துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பங்கேற்பு

கோவை, டிச. 13: கோவையில் புதிய மேம்பாலம், செம்மொழி பூங்கா, தேசிய ஆடை வடிவமைப்பு சிறப்பு மையம் உள்ளிட்ட ரூ.543 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் முன்னிலையில் முதல்வர் கருணாநிதி சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று துவக்கி வைத்தார்.

கோவையில் காந்திபுரம் மேம்பாலம், செம்மொழி பூங்கா, அண்ணா பல்கலைக்கழக புதிய கட்டிடம், காண்டூர் கால்வாய் புனரமைப்பு, மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சார்பில் ரூ.21 கோடி செலவில் தேசிய ஆடை வடிவமைப்பு பயிற்சி சிறப்பு மையம், சர்தார் வல்ல பாய் பட்டேல் சர்வ தேச ஜவுளி மேலாண்மை நிறுவனத்தில் ரூ.20 கோடியில் புதிய கட்டி டம் உள்ளிட்ட பல் வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் கட்டிடங்கள் திறப்பு விழா கோவை வஉசி மைதானத்தில் நேற்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்பதாக இருந்தது. திடீர் உடல் நலக்குறைவால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டு சென்னையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் முறையில் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார். தமிழக ஊரக தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் வரவேற்றார்.

அடிக்கல் நாட்டி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

கோவையில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதாக இருந்தேன். ஆனால் உடல்நிலை ஒத்துழைக்காததால் வர முடியாததற்கு வருந்துகிறேன். எனது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த தொண்டர்களிடம் வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பு கோருகிறேன். .

இன்று கோவைக்கு ரூ.543 கோடி மதிப்பில் பல்வேறு புதிய கட்டமைப்புகளை உருவாக்கிட நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் மற்றும் திறப்பு விழாவில் பங்கு பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கோவை சிங்காநல்லூரில் தங்கி வாழ்ந்த காலம் தொட்டு என் சிந்தையில் என்றும் நிறைந்திருக்கும் இந்த கோவை மாநகர வளர்ச்சியில் நான் எப்போதும் தனி கவனம் செலுத்தி வருகிறேன்.

கோவை மாநகர வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில் கடந்த காலங்களில் வேளாண்மை பல்கலைக்கழகம், சிறுவாணி குடிநீர், கோவையில் மூன்றடுக்கு மேம்பாலம், கோவை கிராஸ்கட் ரோட்டில் மேம்பாலம், கோவை சத்தியமங்கலம் சாலையில் பாலம், கோவை சிறுவாணி சாலையில் பாலம், கோவை&திண்டுக்கல் சாலையில் பாலம், நொய்யல் ஆற்றில் பாலம், ஆத்துப்பாலம், புறவழிச்சாலை, அண்ணா பல்கலைக்கழகம், 29 ஏக்கரில் ரூ.250 கோடி செலவில் தகவல் தொழில் நுட்ப பூங்கா, ரூ.1659 கோடியில் கோவை மாநகரை மேம்படுத்த ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பட்டு புனரமைப்பு திட்டம், பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களை ஈர்த்து எழுச்சியோடு கடந்த ஜூன் மாதம் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இதையொட்டி மாநகரில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. அவற்றுடன் மேலும் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட இந்த விழாவில் அடிக்கல் நாட்டப்படுகிறது.

செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ஒன்று தான் காந்திபுரம் மேம்பாலம். காந்திபுரம் பகுதியில் பேருந்து நிலையங்களும், பல்வேறு வணிக நிறுவனங்களும் அருகருகே அமைந்துள்ளன. கோவையில் போக்குவரத்து நெரிசலும், வணிக நிறுவனங்களும் அதிகமாக உள்ள காந்திபுரத்தில் நெரிசலை தவிர்க்க ரூ.148 கோடி மதிப்பில் ஒரு கிமீ தூரம் கொண்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. நஞ்சப்பா ரோட்டில் தொடங்கி சத்தியமங்கலம் ரோடு வரை இந்த பாலம் அமைக்கப்படும்.

மாநாட்டில் அறிவிக்கப்பட்ட மற்றொன்று, தற்போது மத்திய சிறைச்சசாலை அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்படவுள்ள செம்மொழி பூங்கா. 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்படவுள்ளது. அதற்காக கோவை சிறைச்சாலை வெள்ளலூரில் 75 ஏக்கரில் மாநகராட்சி இடத்துக்கு மாற்றப்படும். அதற்கு முன்பாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.25 கோடி செலவில் பூங்காவின் கட்டடங்கள் இல்லாத முதல் கட்ட பணிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

பரம்பிகுளத்தில் இருந்து திருமுர்த்தி அணைக்கு செல்லும் காண்டூர் கால்வாய் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அது தற்போது சிதிலமடைந்துள்ளது. இதனால் முழு கொள்ளளவு தண்ணீரையும் கொண்டு செல்ல முடியாத நிலையில் சேதமடைந்துள்ளது.

அதை சீரமைக்கவேண்டும் என்று கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதை சீரமைக்க ரூ.185 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நூற்றாண்டு விழாவையொட்டி செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக 50 கோடி ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆயிரம் படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் மேலும் ஆயிரம் படுக்கை வசதியும், 250 மாணவர்கள் தங்கும் விடுதியும் அமைக்கப்படும்.

கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 181 கல்லூரிகளை இணைப்பாக கொண்ட கோவை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சோமையம்பாளையத்தில் 121 ஏக்கர் பரப்பளவில் ரூ.67 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் லாபம் ஈட்டும் சிறந்த நிறுவனமாக விளங்கும் கோவை ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் திறன் 2.5 லட்சம் லிட்டர் கொள்ளவில் இருந்து 5 லட்சம் என உயர்த்திடும் நோக்கில் ஏறத்தாழ ரூ.28 கோடி மதிப்பில் கோவை ஆவின் நிறுவனம் நவீனமயமாக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் குறுகிய கால ஆடை வடிவமைப்பு தொழில் சார்ந்த பயிற்சிகள், பட்டமேற்படிப்பு, பட்டய கல்வி, ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி தொழில் தொடர்பான படிப்புகள் போன்றவை வழங்கிடும் நோக்கத்தில் மத்திய ஜவுளித்துறை மூலம் 6.5 ஏக்கர் பரப்பில் தமிழக அரசின் நிதியுதவியுடன் ரூ.25 கோடி செலவில் தேசிய ஆடை வடிவமைப்பு பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. இன்றைய விழாவில் மட்டும் 7 புதிய கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

அதேபோல் சர்தார் வல்லபாய் படேல் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் சார்பில் ரூ.21 கோடி செலவில் புதிய கட்டிடங்களும் திறக்கப்பட்டுள்ளன. இப்படி கோவை மாவட்டத்துக்கு செயல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டமைப்புகள் அனைத்தும் குறித்த நேரத்திற்குள் கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாற்றவேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

முதல்வர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசிய பின்னர், கோவை நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சாமிநாதன், மதிவாணன் ஆகியோர் பேசினர்.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் 543 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை காந்திபுரம் மேம்பாலம், காண்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிகள், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டிடம், செம்மொழிப் பூங்கா, அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழக வளாகம், கோவை ஆவின் நவீனமயமாக்கல் மற்றும் தேசிய ஆடை வடிவமைப்பு பயிற்சி மையத்திற்கு முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி புதிய கட்டிடங்களை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். உடன் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கணேசன்.