Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையுடன் புதிதாக இணைந்த பகுதிகளில் குடிநீர், கழிவு நீர் கட்டமைப்புப் பணிகள் தீவிரம்

Print PDF

 தினமணி        30.11.2011

சென்னையுடன் புதிதாக இணைந்த பகுதிகளில் குடிநீர், கழிவு நீர் கட்டமைப்புப் பணிகள் தீவிரம்


சென்னை, நவ. 29: சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவு நீர் கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 இது குறித்து சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அதிகாரிகள் கூறியது:

 சென்னை நகருடன் புதிய பகுதிகள் இணைக்கப்படுவதற்கு முன்பு உள்ள மக்கள் தொகை சுமார் 55 லட்சம் ஆகும். புதிய பகுதிகளைச் சேர்க்காமல் கழிவு நீர் கால்வாயின் மொத்த நீளம் 2677 கி.மீ. ஆகும். 196 கழிவு நீரேற்று நிலையங்கள் உள்ளன.

 கோயம்பேடு,கொடுங்கையூர், நெசப்பாக்கம் உள்பட 9 இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்ய வசதியாக 30 மீட்டருக்கு ஒரு ஆள் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

 மொத்தம் 79 ஆயிரம் ஆள் நுழைவு வாயில்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 46 கோடி லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. 2 ஆயிரத்து 228 பணியாளர்கள் உள்ளனர். கழிவு நீர் குழாயில் தூர்வார 70 தூர்வாரும் இயந்திரங்களும், 83 அடைப்பை நீக்கும் விசை இயந்திரங்களும் உள்ளன. வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர், நீரேற்று நிலையத்துக்கு குழாய் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்டபின் சென்னையில் ஓடும் ஆறுகள் மூலம் கடலில் கலக்கிறது.

 மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழை நீர் கழிவு நீர் குழாயில் திருப்பி விடப்படுவதால் கழிவுநீர் குழாயில் நீர் அளவுக்கு அதிகமாக செல்வதால் அழுத்தம் அதிகரித்து குழாய்கள் உடைந்து விடுகின்றன. சென்னை நகரில் மழை நீர் வடிகால்வாய்கள் தூர்வாரி சுத்தம் செய்யப்படாததால் மழைக் காலத்தில் அந்தக் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் செல்லாமல் கழிவு நீர் குழாயில் விடப்படுகிறது.

 இது குறித்து சென்னை மாநகராட்சியிடம் பல முறை தெரிவித்துள்ளோம். மழை நீரை சேமிப்பது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

 புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள்: சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவு நீர் தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பகுதிகளுக்கு தனியாக 3 மேற்பார்வை பொறியாளர்கள், 7 பகுதி பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இவர்கள் அந்தப் பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள், குடிநீர் வழங்குதல், கழிவு நீர் அகற்றுவது ஆகியவற்றுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகள், தேவையான அலுவலகங்கள் அமைக்க இடம் தேர்வு செய்வது ஆகியவை தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதற்கு முன் அந்த உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றிய பணியாளர்கள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க குடிநீர் வாரியத்தில் பணிபுரியலாம்.

 மேலும் தேவையான பணியாளர்களை பணி அமர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள் முழுவதுமாக ஓராண்டுக்குள் முடியும் என்று எதிபார்க்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.