Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வடக்கு டெல்லி மாநகராட்சி வார்டு மேம்பாட்டு நிதி ரூ.1.05 கோடியாக உயர்வு

Print PDF

தினகரன்                      25.08.2012

வடக்கு டெல்லி மாநகராட்சி வார்டு மேம்பாட்டு நிதி ரூ.1.05 கோடியாக உயர்வு


புதுடெல்லி: வடக்கு டெல்லி மாநகராட்சி உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.1.05 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த தகவலை நிலைக் குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா தெரிவித்தார். டெல்லி மாநகராட்சி 3 ஆக பிரிக்கப்பட்டது. அதன்படி கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு டெல்லி மாநகராட்சிகளாக இப்போது 3 மாநகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. தெற்கு மற்றும் வடக்கு மாநகராட்சிகளில் தலா 104 வார்டுகளும் கிழக்கு டெல்லி மாநகராட்சியில் 64 வார்டுகளும் உள்ளன.   புதிய மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. தேர்தலில் பா.ஜ அமோக வெற்றி பெற்று 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது.இந்த நிலையில் வடக்கு டெல்லி மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நேற்று அந்த மாநகராட்சியின் திருத்தப்பட்ட பட்ஜெட்டை வெளியிட்டார்.

 அப்போது அவர் கூறியதாவது:ஒரே மாநகராட்சியாக இருந்தபோது செலவு செய்த தொகை, 3 மாநகராட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதனால் வார்டுகளுக்கு ஒரே அளவு நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. இதனால் இந்த மாநாகராட்சியின் நிதியினை பெருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் மக்கள் மீது புதிதாக வரி விதிக்கவும் இந்த மாநகராட்சி விரும்பவில்லை. வடக்கு டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 104 வார்டுகளுக்கும் இப்போது வார்டு மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ.50 லட்சம் அனுமதிக்கப்படுகிறது. இந்த நிதியை உயர்த்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.1.05 கோடியாக உயர்த்தப்படுகிறது.

இதன்மூலம் இனிமேல் ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களின் வார்டு மேம்பாட்டு பணிக்காக இனிமேல் ரூ.1.05 கோடி செலவு செய்ய சிபாரிசு செய்யலாம். அதேபோல இந்த மாநகராட்சியில் இருக்கும் தெரு விளக்குகளை சீரமைக்க ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.5 லட்சம் அனுமதிக்கப்படுகிறது.இதுவரை இந்த மாநகராட்சியில் 700 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.  இந்த ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை 750 ஆக உயர்த்தப்படுகிறது. சாத் பூஜைக்காக இந்த ஆண்டு ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.இவ்வாறு யோகேந்தர் சந்தாலியா கூறினார். இந்த திருத்தப்பட்ட பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சி தலைவர் முகேஷ் கோயல் (காங்கிரஸ்) கூறுகையில், ‘பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. மக்களுக்கு உதவாத பட்ஜெட். ஓய்வூதியம் பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. தேர்தலை மனதில் கொண்டு போடப்பட்டுள்ள பட்ஜெட் இது’ என்றார்.