Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போடியில் நவீன எரிவாயு தகன மேடை பழுது

Print PDF
தின மணி           27.02.2013

போடியில் நவீன எரிவாயு தகன மேடை பழுது


போடி நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை பழுதடைந்துள்ளதால், சடலத்தை எரியூட்ட முடியாத நிலை ஏற்பட்டு, பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.

போடி நகராட்சிக்குச் சொந்தமான சாந்திவனம் சுடுகாடு, போடி கொட்டகுடி ஆற்றங்கரையில் உள்ளது. இங்கு, சில மாதங்களுக்கு முன் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. இதில், கருவேலங் கட்டைகளை கொண்டு எரிவாயுவை உருவாக்கி, அதன்மூலம் சடலம் எரிக்கப்படுகிறது.

இந்த மையம் செயல்படுவதற்கு, திண்டுக்கல் சுற்றுச்சூழல் துறை மூலம் அனுமதி பெறப்பட்டது.

40 நாள்களுக்கு முன் தான் இந்த எரிவாயு தகன மையம் செயல்படத் தொடங்கியது. இந்த மையத்தை, பெரியார் சேவை மையம் மூலம் நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. ஆனால், பெரியார் சேவை மையத்தினரால் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, போதிய பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் போடி மேலத் தெருவில் இறந்த நாகம்மாள் (68) என்பவரின் சடலம், இந்த எரிவாயு மையத்தில் எரியூட்டுவதற்கு கொண்டுவரப்பட்டது. அதனைப் பெற்று, எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர், நாகம்மாளின் 3 மகன்கள் இறுதிச் சடங்குகளை செய்துவிட்டு, அவரது அஸ்தியை சிறிது நேரம் கழித்து வந்து பெற்றுச் செல்வதாகக் கூறிவிட்டு, உறவினர்களுடன் வீடு திரும்பிவிட்டனர்.

பின்னர், அஸ்தியை வாங்க உறவினர்கள் சிலர் மாலையில் மீண்டும் சுடுகாட்டுக்குச் சென்றனர். ஆனால், அங்கு சடலம் எரியூட்டப்படாமல் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால், உறவினர்கள் சுடுகாட்டில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சடலத்தை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, பெரியார் சேவை மைய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பழைய முறையில் விறகுகளை அடுக்கி சடலத்தை எரியூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இத்தனை பிரச்னைகள் ஏற்பட்டும், நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வராததால், இறந்தவரின் உறவினர்கள் அதிருப்தியடைந்தனர்.

இது குறித்து, பெரியார் சேவை மைய நிர்வாகி சுருளிராஜ் கூறுகையில், நவீன எரிவாயு தகன மேடையில் கருவேலங்கட்டைகளை வைத்து எரிவாயு உருவாக்கும் முறையில் சிக்கல் உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடுகளையும் நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை. சமையல் எரிவாயு சிலிண்டர் மூலம் எரியூட்டும் முறை மற்றும் மின்சாரம் மூலம் எரியூட்டும் முறையை கொண்டு வரவேண்டும் என்றார்.
Last Updated on Wednesday, 27 February 2013 10:30