Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சிகளில் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு விலங்குகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடு

Print PDF
தினமலர்          04.03.2013

பேரூராட்சிகளில் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு விலங்குகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் விலங்குகளை பிடிக்க, ஒருங்கிணைப்பு குழு அமைக்க, பேரூராட்சி நிர்வாகங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், சிட்லபாக்கம், இடைக்கழிநாடு, கருங்குழி, குன்றத்தூர், மாடம்பாக்கம், மாமல்லபுரம், மாங்காடு, நந்திவரம் கூடுவாஞ்சேரி, பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், செம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், திருநீர்மலை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், வாலாஜாபாத், என 18 பேரூராட்சிகள் உள்ளன.

சீர்கேடு

பேரூராட்சிகளில் துப்புரவு ஆய்வாளர் தலைமையில், துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனினும் பேருராட்சிகளில், முழு சுகாதாரம் கேள்விக் குறியாகவே உள்ளது. பேரூராட்சிகளில் பராமரிப்பின்றி சுற்றித்திரியும் ஆடு, மாடு, நாய், பன்றி, போன்ற விலங்குகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

சாலையோரம் கொட்டப் பட்ட குப்பைகளை, மாடுகள் தீவனமாக எடுத்துக் கொள்கின்றன. இதனால் குவியாலாக கொட்டப்பட்ட குப்பை சிதறி, கழிவுநீர் கால்வாய்களில் விழுந்து, கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது.

பன்றிகள் கழிவு நீர் கால்வாய்களில் உருண்டு, சேற்றுடன் தெருக்களில் திரிகின்றன.

இதனால் தெருக்களில் வசிப்போருக்கு, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

நடவடிக்கை

இவற்றை தவிர்ப்பதற்காக, பேரூராட்சிகளில் சுற்றித்திரியும் நாய், மாடு, பன்றிகளை பிடிக்க,
பேரூராட்சி அளவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இக்குழுவில் கால்நடை மருத்துவர், சுகாதார மருத்துவ அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர், வார்டு கவுன்சிலர், ஆகியோர் இருப்பர்.

அவர்களின் பரிந்துரை பெயரில், விலங்குகளைப் பிடித்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதா, அல்லது அரசு விலங்கியல் காப்பகத்தில் ஒப்படைப்பதா, என, முடிவு செய்யப்படும்.

உத்தரவு

இது குறித்து, செயல் அலுவலர் ஒருவர் கூறியதாவது:

பேரூராட்சியில் நாய், பன்றி உள்ளிட்ட விலங்குகளைப் பிடிக்க, அரசு தடையுத்தரவு உள்ளது.
எனினும், சுகாதாரத்திற்காக அனைத்து பேரூராட்சிகளிலும், "சுகாதார ஒருங்கிணைப்பு குழு' ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி குழு அமைத்து வருகிறோம். இதன் மூலம் பேரூராட்சிகளில் முழுமையாக சுகாதாரம் பேணி, காக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Last Updated on Monday, 04 March 2013 11:30