Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கழிவுநீர் விடப்பட்ட காலியிடத்தில் ரூ23 லட்சம் செலவில் பூங்கா துரைப்பாக்கத்தில் மாநகராட்சி ஏற்பாடு

Print PDF

தினகரன்                    08.03.2013

கழிவுநீர் விடப்பட்ட காலியிடத்தில் ரூ23 லட்சம் செலவில் பூங்கா துரைப்பாக்கத்தில் மாநகராட்சி ஏற்பாடு

துரைப்பாக்கம், : துரைப்பாக்கம் பகுதியில் காலி மைதானத்தில் கழிவுநீர் விடப்படுவதாக தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளி யானது. இதன் எதிரொலி யாக அப்பகுதியில் 23 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் துரைப்பாக்கம் 193வது வார்டுக்குட்பட்ட ஆனந்தா நகர் காலி மைதானத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை விடுகின்றனர். இதனால் அப்பகுதி கொசு உற்பத்தி தொழிற்சாலையாக மாறியுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள மார்ஸ் பொதுநல சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக துரைப்பாக்கம் ஆனந்தா நகரில் காலியாக உள்ள மைதானத்தில் பூங்கா அமைக்க மாநகராட்சி சார்பில் ரூ23 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு வார்டு கவுன்சிலர் டி.சி.கோவிந்த சாமி தலைமை வகித்து பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், மார்ஸ் பொதுநல சங்க தலைவர் சத்தியநாராயணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இப்பகுதியில் மார்ஸ் பொது நல சங்கம் சார்பில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் குடிநீர் நிரப்பி தர மெட்ரோ வாட்டர் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்ய மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தொட்டிகளில் எண்கள் மட்டுமே எழுதியுள்ளனர். இதுவரை குடிநீர் நிரப்பித்தரவில்லை.

இதையடுத்து மார்ஸ் பொதுநல சங்கமே, ரூ1400 கட்டி லாரியில் தண்ணீர் வரவழைத்து தொட்டிகளில் நிரப்பி அப்பகுதி மக்களுக்கு வினியோகித்து வருகிறது. சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாநகராட்சிக்கு வரி செலுத்தியும் தொட்டி குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தர மறுக்கின்றனர். இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றனர்.

Last Updated on Friday, 08 March 2013 09:53