Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெருந்துறை பகுதியில் ரூ6.90 கோடி வளர்ச்சிப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

Print PDF
தினகரன்         09.03.2013

பெருந்துறை பகுதியில் ரூ6.90 கோடி வளர்ச்சிப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

ஈரோடு: பெருந்துறை பகுதிகளில் 6.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், பெருந்துறை, காஞ்சிக்கோவில் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். 2012-13ம் ஆண்டு நபார்டு நிதியுதவியின்கீழ் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் பெருந்துறை பேரூராட்சி அலுவலக கட்டிட பணிகளை பார்வையிட்டார். நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெருந்துறை - கவுந்தப்பாடி ரோட்டில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பராமரிப்பு பணிகளையும், 1.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்பாடு பணிகளையும் ஆய்வு செய்தார்.

காஞ்சிக்கோவில் பேரூராட்சி முத்துக்கவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள குளத்தில் நபார்டு திட்டத்தின்கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாருதல், தடுப்புச்சுவர் கட்டும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின்கீழ் ஒருகோடியே 58 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டிடப்பணிகளை பார்வையிட்ட கலெக்டர் உரிய காலக்கெடுவிற்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.

திங்களூர் ஊராட்சி தாண்டாகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையலறை, இருப்பறை பணிகளை பார்வையிட்டார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு பணிகள், ஊரக கட்டமைப்பு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகள் என 6 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சண்முகம் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பெருந்துறை பேரூராட்சி தலைவர் சரஸ்வதி, பேரூராட்சிகள் துறை செயற்பொறியாளர் மோகன், செயல் அலுவலர் தன்னாசி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் வாணி, தமிழ்ச்செல்வி, ஒன்றிய பொறியாளர் வெங்கடேசன் மற்றும் துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.