Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அழகிய இடங்களாகின்றன 3 குளங்கள்... துளிரும் நம்பிக்கை! நடைபாதை அமைக்க மாநகராட்சி திட்டம்

Print PDF
தினமலர்              12.07.2013

அழகிய இடங்களாகின்றன 3 குளங்கள்... துளிரும் நம்பிக்கை! நடைபாதை அமைக்க மாநகராட்சி திட்டம்


கோவை:மத்திய அரசின் மானியம் தாமதமாகி வரும் நிலையிலும், கோவை நகரிலுள்ள மூன்று குளங்களை பொழுதுபோக்கிடங்களாக மாற்றும் முயற்சியில், மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

கோவையை பசுமையான, அழகான நகரமாக மாற்றும் வகையில், சூழல் அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன், நகரில் 65 பூங்காக்களை மேம்படுத்தவும், 9,500 மரங்களை நட்டு வளர்க்கவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில், கோவை நகரிலுள்ள குளங்களை, பொழுதுபோக்கிடங்களாக மாற்றுவதற்கான வேலைகளையும், மாநகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது.

மாநகராட்சி வசமுள்ள எட்டு குளங்களை 200 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது; இன்னும் கிடைக்கவில்லை.

எனினும், உக்கடம் பெரியகுளம் மற்றும் குறிச்சி குளங்கள் தூர் வாரப்பட்டு, 35 அடி அகலத்துக்கு கரைகள் நன்கு தயார் படுத்தப்பட்டுள்ளன. இந்த குளங்களின் கரைகளில், காலை மற்றும் மாலை நேரங்களில், மக்கள் "வாக்கிங்' செல்லத் துவங்கி விட்டனர்; இதே வேகத்தில், குளக்கரைகளில் நடைபாதைகளை உருவாக்கித் தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் அதிகரித்துள்ளது.

பெரியகுளத்தில் நடைபாதை, "பார்க்கிங்', மரம் வளர்ப்பு, கரையோரப் பூங்கா போன்றவற்றை அமைத்துத் தருவதற்கு, நகரிலுள்ள பல்வேறு நிறுவனங்களும் முன் வந்துள்ளன. இவர்களைப் பட்டியலிட்டு வரும் மாநகராட்சி நிர்வாகம், அனைவர் ஒத்துழைப்புடன் உக்கடம் பெரியகுளத்தில் மிக விரைவில் நடைபாதைகளையும் அமைக்கவுள்ளது. குறிச்சி குளம், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தெற்கு மண்டல மக்கள் பயன்பெறும் வகையில், அதையும் மேம்படுத்தவும் திட்டம் வகுத்துள்ளது.

அமைச்சர் தாமோதரன், மேயர், கமிஷனர் லதா மற்றும் அதிகாரிகள், குறிச்சி குளத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கரையை சமீபத்தில் பார்வையிட்டனர்.

குனியமுத்தூர் கோவில் அருகில், குளத்துக்கு தண்ணீர் வரும் இடத்தில், கீழ்பகுதியில் மாநகராட்சி சார்பில் பாலம் கட்டித்தர மேயர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தண்ணீர் வெளியேறும் பகுதியில், எம்.எல்.ஏ., நிதியில் பாலம் கட்டவும், மதகுப்பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபாதையுடன் கூடிய மேம்பாலமும் அமைக்கலாம் என்று மேயர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இவை அனைத்தையும் இணைத் தால், குளத்தைச் சுற்றிலும் நடைபாதை அமைந்து விடும்.

அதற்கு அடுத்ததாக, வாலாங்குளத்திலும் இதே போல பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்கவும், மாநகராட்சி முடிவு செய்துள்ளது. உக்கடம் மற்றும் அம்மன் குளத்தில், ஜே.என்.என். யு.ஆர். எம்., திட்டத்தில் 3,840 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால், வாலாங் குளத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு மாற்று வீடுகளை ஒதுக்கி, அந்த வீடுகள் அனைத்தையும் இடித்து, சுற்றிலும் கரை, வேலி மற்றும் நடைபாதை அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இதற் கான பணிகள் ஒரு மாதத்தில் துவங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

நொய்யலுக்கு புத்துயிர்!


மேயர் கூறுகையில், ""பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன், கோவை நகரிலுள்ள குளங்களை பொழுதுபோக்கிடங்களாக மாற்ற முயற்சித்து வருகிறோம். முதல் கட்டமாக, இந்த மூன்று குளங்களை மேம்படுத்திய பின், கழிவு நீர் கலப்பதைத் தடுக்கவும், மற்ற குளங்களையும் அதே போல மேம்படுத்தவும் திட்டம் உள்ளது. குளங்களை மேம்படுத்தும் திட்டத்துடன், நகருக்குள் உள்ள நொய்யல் ஆற்றையும் அழகு படுத்தும் ஆலோசனை உள்ளது. மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கினால், இவற்றையெல்லாம் சிறப்பாக செயல்படுத்த முடியும்,'' என்றார்.