Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்காக ரூ23.76 கோடியில் புது திட்டம்

Print PDF

தினகரன்              05.08.2013

மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்காக ரூ23.76 கோடியில் புது திட்டம்


ஈரோடு, : ஈரோடு மாநகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கம் சார்பில் 23 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கம் மூலமாக 2013-14ம் ஆண்டில் திடக்கழிவு மேலாண்மை, சாலைகள் சீரமைத்தல், மழைநீர் வடிகால் கட்டுதல், தெருவிளக்குகள் பராமரித்தல், பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகள் ரூ.23 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி வெண்டிபாளையம் உரக்கிடங்கு ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளது. சாலைகள் சீரமைப்பு திட்டத்தில் ஜவுளிநகர் மெயின்ரோடு மற்றும் குறுக்கு சாலைகளில் ஒரு கி.மீட்டர் தூரம் ரூ.68.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் தார்ச் சாலைகள் அமைக்கப்படவுள்ளது.

மழைநீர் வடிகால் கட்டுதல் திட்டத்தில் சி.எம்.நகர், அம்பேத்கர் நகர், சொட்டையம்பாளையம் மெயின்ரோட்டில் இருந்து சத்தி ரோடு வரை, பாலக்காட்டூர், எஸ்.எஸ்.பி. பள்ளி முதல் பெருமாள்மலை வரை, மங்கலத்துறை சந்திப்பில் இருந்து ஜவுளிநகர் வரை, சிந்தன்நகர், தென்றல்நகர், இபிபி நகர், மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட், பண்ணை நகர், அணைக்கட்டு பகுதி, பெரியார்நகர், முத்துசாமி காலனி, மரப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 31 இடங்களில் 20 கி.மீட்டர் தூரம் ரூ.9 கோடியே 2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ளது.

மேலும் தெருவிளக்குகள் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. காசிபாளையம் மலைக்கோவில் பகுதியிலும், பெரும்பள்ளம் அண்ணாடெக்ஸ் பகுதியிலும், கட்டபொம்மன் வீதியிலும் என 3 இடங்களில் 2 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலங்கள் கட்டப்படவுள்ளது. இந்த ஆண்டு 23 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

 இதுகுறித்து மேயர் மல்லிகா பரமசிவம் கூறியதாவது: ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கத்தின் மூலமாக எந்தெந்த வார்டுகளில் என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதிக இடங்களில் மழைநீர் வடிகால் கட்டப்படவுள்ளது.

இதற்கு தேவைப்படும் நிதி குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு போக மீதமுள்ள தொகையை மாநகராட்சி பொது நிதியில் இருந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அரசிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு மேயர் தெரிவித்துள்ளார்.