Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 20 கோடியில் மாநகராட்சி மின் சேமிப்பு திட்டம்! விரிவாக்கப்பகுதியில் விரைவில் அறிமுகம்

Print PDF

தினமலர்                12.08.2013

ரூ. 20 கோடியில் மாநகராட்சி மின் சேமிப்பு திட்டம்! விரிவாக்கப்பகுதியில் விரைவில் அறிமுகம்

கோவை:கோவை மாநகராட்சி இணைப்பு பகுதிகளில், மின் சக்தி சேமிப்பு திறனுள்ள மின் விளக்குகளை பொருத்தி, 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும், மின்சக்தியை சேமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் பொதுநிதியில் இதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் பழைய 72 வார்டுகளில் (தற்போதைய 60 வார்டு) 41 ஆயிரத்து 500 தெருவிளக்குகளும், இணைப்பு பகுதிகளில் (தற்போதைய 40 வார்டு) 29 ஆயிரத்து 200 தெருவிளக்குகளும் உள்ளன. சோடியம் லைட், ஐமேக் லைட், டியூப் லைட்டுகள் உள்ளன.

தெருவிளக்கு மின் பயன்பாட்டுக்காக மாதம் 90 லட்சம் ரூபாய் வரையிலும் மாநகராட்சி நிர்வாகம் செலவிடுகிறது. இதுதவிர, தெருவிளக்கு மின்கம்பங்கள், தெருவிளக்குகள் பராமரிப்புக்கு தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது.

மின் சக்தியை சிக்கனப்படுத்த, குறைந்த மின் சக்தியில் அதிக ஒளி கொடுக்கக்கூடிய தெருவிளக்குகளை பொருத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவையில் 2010ல், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தபோது, மாநகராட்சி பகுதியிலுள்ள முக்கிய ரோடுகளில் மின் சக்தி சேமிப்பு திறனுள்ள விளக்குகள் பொருத்தப்பட்டன. அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, உக்கடம் பைபாஸ் ரோடு, புதிதாக மேம்படுத்தப்பட்ட திட்டச்சாலை, இணைப்பு சாலைகளில் மின்சக்தி சேமிப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

மாநகராட்சி பழைய வார்டுகளில் மின் சக்தி சேமிப்பு விளக்குகள் மாற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநகராட்சி இணைப்பு பகுதிகளில் தெருவிளக்குகளை முறைப்படுத்தவும், மின் சக்தி சேமிப்பு விளக்குகள் பொருத்தவும்மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் பொதுநிதியில் இதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான டெண்டர் கோரப்பட்டது. டில்லியை சேர்ந்த நிறுவனத்தின் டெண்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

"மாநகராட்சி இணைப்பு பகுதிகளில் இந்நிறுவனம் நான்கு மாதங்களுக்கு நேராய்வு தணிக்கை செய்ய வேண்டும். எந்தெந்த பகுதியில் கூடுதலாக தெருவிளக்கு கம்பம் அமைக்க வேண்டும்; சோடியம் லைட்டுகளை மாற்றி அமைக்க வேண்டும்; தேவையற்ற இடங்களில் உள்ள தெருவிளக்குகளை அகற்ற வேண்டும்' என, அறிக்கை கொடுக்க உத்தரவிடப்பட்டது.

இப்பணிகள் முடிந்ததும், தற்போதுள்ள தெருவிளக்குகளுக்கு பதிலாக மின்சக்தி சேமிப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு, தேவையற்ற விளக்குகள் அகற்றப்படும்.

முதல் ஆண்டு பராமரிப்பில் 35 சதவீதம் மின் சக்தி சேமிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இந்நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

35 சதவீத மின்சக்தி சேமிப்பு

மேயர் வேலுசாமி கூறுகையில், ""மாநகராட்சியுடன் இணைப்பட்ட பகுதிகளில், தெருவிளக்கு மின் சக்தி செலவுக்காக ஆண்டுக்கு 4.97 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பராமரிப்பு செலவுக்காக ஆண்டுக்கு 1.50 கோடி ரூபாய் செலவாகிறது. மின் சக்தி சேமிப்பு விளக்குகள் பொருத்தினால், பராமரிப்பு செலவும் குறையும்.

மின் சக்தி சேமிப்பு விளக்குகள் பொருத்தும் திட்டத்திற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி எடுத்துள்ள நிறுவனம் தணிக்கை அறிக்கை தயாரிக்க 41.48 லட்சம் ரூபாய் கேட்டுள்ளது. டிசம்பருக்குள் தணிக்கை பணி முடிந்து, மின் சக்தி சேமிப்பு விளக்கு பொருத்தப்படுகிறது. ஓராண்டில் இப்பணி நிறைவு செய்யப்படும். இதன் மூலம் 35 சதவீதம் மின் சக்தி சேமிக்கப்படும்,'' என்றார்.